உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு குச்சவெளி பிரதேச சபை,பிரதேச செயலகம் ஆகியன இணைந்து நடத்திய “வளமான நாடும் – அழகான வாழ்க்கையும்” எனும் தொனிப்பொருளில் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்ட ஆரம்ப வைபவத்தில் குச்சவெளி பிரதேச சபைக்குட்ட 87 குடும்பங்களுக்கான கானி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் எ.முபாறக் தலைமையில் கடந்த 15 ஆம் திகதி குச்சவெளி பிரதேச சபையில் இந்தத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிரதம அதிதியாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார். குச்சவெளி பிரதேச சபைக்குட்ட 87 குடும்பங்களுக்கான கானி உறுதிப்பத்திரம், மதஸ்தளங்களுக்கான உபகரணங்கள், வியாபாரப் பத்திரங்கள், மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விரர்களுக்கான சான்றிதழ் , கிண்ணங்கள், சிறு கைத்தொழில் முனைவோருக்கான வியாபார அனுமதிப்பத்திரங்கள் போன்றவற்றை வழங்கி வைத்தார்.
இந்த நடமாடும் சேவையில் சுற்றுச் சூழல், கிராம மட்ட பிரச்சினைகள், தேசிய அடையாள அட்டை, அஸ்வெசும நலன்புரித் திட்டம், ஆதன வரி, காணி, கட்டடம், வியாபார அனுமதிப் பத்திரம், முறைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டதோடு, அவைகள் தொடர்பான ஆலோசனைகளுடன் வழிகாட்டல்களும் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஜி.ரொஷான் அக்மினன், கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை தவிசாளர் ஜி.பிரியந்த, கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தவிசாளர் பி.ஆர்.வி.கே.நவரட்ண, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் திருமதி வி.ரவிந்திரன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் வி.தேவநேசன், குச்சவெளி சம்மாந்துறை பிரதேச செயலாளர், திருமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட உயரதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.