2022 ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பிறகு ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதற்காக பிறேஸிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் , மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2019 , 2022 ஆம் ஆண்டுகளுக்கிடையில் பிறேஸிலை ஆண்ட தீவிர வலதுசாரி அரசியல்வாதியான ஜெய்ர் போல்சனாரோ, தற்போது தலைநகர் பிறேஸிலியாவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.ஐந்து குற்றச்சாட்டுகளில் 70 வயதான ஜெய்ர் போசனாரோ குற்றவாளி எனக் கண்டறிந்த பல மணி நேரங்களுக்குப் பிறகு, ஐந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு இந்த தண்டனையை வழங்கியது.
ஆட்சிக் கவிழ்ப்பை நடத்த முயன்றது, ஆயுதமேந்திய குற்றவியல் அமைப்பின் ஒரு பகுதியாக இருந்தது, ஜனநாயக சட்டத்தின் ஆட்சியை வன்முறையில் ஒழிக்க முயன்றது, வன்முறையில் ஈடுபட்டது, மாநில சொத்துக்கள் , பட்டியலிடப்பட்ட பாரம்பரியத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது போன்ற குற்றாச்சாட்டுகள் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக போல்சனாரோவின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.