நேபாள நாட்டு அரசு கடந்த வாரம் யூடியூப், பேஸ்புல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 20க்கும் அதிகமான சமூகவலைதளங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்தது. இதற்கு அந்நாட்டு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக ஜென் ஸீ தலைமுறை இளைஞர்கள் தெருக்களில் இறங்கி போராட தொடங்கினர். சிறிய அளவில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் வேகமாக பரவியது. இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தனர். ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை போக்க வேண்டும், பிரதமர் சர்மா ஒலி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். முதல் நாள் அமைதியான முறையில் நடந்த போராட்டம் இரண்டாம் நாள் வன்முறையாக மாறியது. காவல்துறையினர் பாதுகாப்பு படையினரை கொண்டு போராட்டத்தை ஒடுக்கு விடலாம் என நினைத்த நேபாள அரசுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் இதனால் தான் போராட்டம் வன்முறை பாதைக்கே திரும்பியது. போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்த பதிலுக்கு இவர்களும் தாக்குதல் நடத்த என 20க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயுள்ளன.
போராட்டக்காரர்கள் அரசு அலுவலகங்கள், பாராளுமன்றம், பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் ஆகியவற்றுக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடி ,கட்டிடங்களுக்கு தீ வைத்து தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இளைஞர்களின் தாக்குதலுக்கு அஞ்சி அடுத்தடுத்து அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். வலைத்தளங்களுக்கு விதித்த தடையை நீக்கியது. இருந்தாலும் பிரதமர் பதவி விலகியாக வேண்டும் என்பதில் போராட்டக்காரர்கள் தீவிரமாக இருந்தனர். இந்த சூழலில் வெளிநாட்டு அமைப்புகளின் தூண்டுதல் காரணமாகவே இந்த போராட்டம் நடப்பதாக கூறிய பிரதமர் சர்மா ஒலி நேற்றைய தினம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
தற்போது பிரதமர் சர்மா ஒலி எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை, அவர் தற்போதைக்கு தலைமறைவாகவே இருக்கிறார். இந்த சூழலில் நேபாள நாட்டு இராணுவம் ஆட்சியை கையில் எடுத்திருக்கிறது. நாட்டின் சுதந்திரம் , இறையாண்மையை பாதுகாப்போம் என தெரிவித்திருக்கிறது. இளைஞர்கள் அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும் வன்முறையை கைவிட வேண்டும் என நேபாள ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது. நேபாள நாட்டு ராணுவ தளபதி அசோக் ராக் சிட்கெல் வெளியிட்டுள்ள வீடியோவில் இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதிப்பாதைக்கு திரும்ப வேண்டும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். காத்மாண்டு உள்ளிட்ட விமான நிலையங்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.