தற்போதைய சமூக மற்றும் கலாசார மாற்றங்களுக்கு ஏற்ப 1973 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க இலங்கை பத்திரிகைப் பேரவைச் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த சட்டம், சமகால சமூக மற்றும் கலாசார போக்குகளை எடுத்துக்காட்டும் வகையில் காலத்தோடு தழுவியதாக மேம்படுத்தப்படவில்லை.
சமகால தொடர்பாடல் தொழிநுட்ப வளர்ச்சியுடன் பத்திரிகை மற்றும் வானொலிக்கு அப்பால், தொலைக்காட்சி, தொலைபேசி, இணையத்தளம் மற்றும் சமூக ஊடக வலையமைப்புக்கள் மிகவும் துரிதமாக மக்களிடையே பரவலடைந்துள்ளதுடன் அவர்களது வாழ்விலும் முக்கிய தாக்கங்களைச் செலுத்துகின்றன.
இந்நிலையில், பத்திரிகைப் பேரவையால் நடத்தப்படும் விசாரணைகளில், இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்ட செய்திகளும் சேர்க்கப்பட்டு பரிசீலிக்கப்படும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படவுள்ளன.
அத்துடன், இலத்திரனியல் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் அச்சு ஊடகங்களின் இணையப் பதிப்புகள் குறித்த பதிவுகள், முறைப்பாடுகள், விசாரணைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தீர்மானங்களைச் சட்டரீதியாக அமுல்படுத்தும் புதிய ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்படவுள்ளன.
இந்த திருத்த யோசனையை சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் முன்வைத்ததுடன், அதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.