கடந்த 12 மணி நேரத்தில் இலங்கையின் பல பகுதிகளில் நடந்த நான்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
இதன்மூலம், 2025 ஆம் ஆண்டில் இதுவரை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.
இவற்றில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன் 53 பேர் காயமடைந்துள்ளனர்.
கிரேண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு:
கடந்த 12 மணி நேரத்தில் நடந்த முதல் துப்பாக்கிச் சூடு, நேற்று (05) இரவு 11:45 மணியளவில் கிராண்ட்பாஸ், மகாவத்தை கடிகார கோபுரம் அருகே நடைபெற்றது.
இதில் 27 வயதான ஹேஷான் சலிந்த புஷ்பகுமார உயிரிழந்தார்.
பஞ்சிகாவத்தை துப்பாக்கிச் சூடு:
இதற்கு சற்று பின்னர், அதிகாலை 1:40 மணியளவில் மருதானையில் உள்ள பஞ்சிகாவத்தை பகுதியில் மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் காயமடைந்த பஞ்சிகாவத்தையைச் சேர்ந்த செந்தில் மோகன் (வயது 44), தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
செந்தில் மோகன், “நெவில்” என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் நெருங்கிய கூட்டாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சூடு, “கெசல்வத்தே கவி” என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் குழுவால் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நீர்கொழும்பு குட்டிதுவ துப்பாக்கிச் சூடு:
இதேவேளை, நீர்கொழும்பு குட்டிதுவ பகுதியில் மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகியுள்ளது.
இன்று (06) அதிகாலை 1:30 மணியளவில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஒரு வீட்டின் மீது 9 மி.மீ துப்பாக்கியால் ஒரு முறை மட்டும் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அலுபோமுல்ல சந்தகலவத்தை துப்பாக்கிச் சூடு:
இன்று காலை 9:45 மணியளவில், பாணந்துறை, அலுபோமுல்ல, சந்தகலவத்தை பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், N99 துப்பாக்கியால் விற்பனை நிலையத்தில் இருந்த பெண்ணை குறிவைத்து சுட்டுள்ளனர்.
எனினும், இந்தச் சம்பவத்தில் குறித்த பெண்ணுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை, மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.