ஒன்லைன் சூதாட்ட செயலி தொடர்பாக பண மோசடி விவகாரத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் நடிகர்கள் முதல் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சமீபத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட பலரும் ஹைதராபாத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்கள். பின்பு இதுகுறித்த விளக்கமும் அளித்தனர். சூதாட்ட செயலியால் இளைஞர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த செயலியால் பலரும் பணத்தை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. தற்கொலையும் அதிகரித்துள்ளது என்று அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக விளையாடிய சுரேஷ் ரெய்னாவிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இவரை சென்னை அணியின் ரசிகர்கள் சின்ன தல என்று அன்புடன் அழைக்கின்றனர். 38 வயதாகும் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார். ஆன்லைன் சூதாட்ட செயலியை சுரேஷ் ரெய்னா விளம்பரப்படுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளன. அதன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.