அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியில் இளம் நட்சத்திர வீரர் டிவால்ட் பிரெவிஸ் சதம் விளாசியதோடு மட்டுமல்லாமல் 9 சாதனைகளையும் முறியடித்துள்ளார். டிவால்ட் பிரெவிஸின் இந்த ஆட்டம்சென்னை ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் டிவால்ட் பிரெவிஸ். ஐபிஎல் தொடரில் ரூ.2.2 கோடிக்கு மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்ட டிவால்ட் பிரெவிஸ், 6 போட்டிகளில் விளையாடி 225 ர ஓட்டங்களை விளாசி தள்ளினார். ஏபி டி வில்லியர்ஸின் மறு உருவமாக உள்ள பிரெவிஸ் வரவால், சிஎஸ்கே ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர்.
ஆல்பி மோர்கல், டூ பிளசிஸ் ஆகியோருக்கு பின் சிஎஸ்கே அணியின் அடையாளமாக டிவால்ட் பிரெவிஸ் மாறுவார் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலும் டிவால்ட் பிரெவிஸ் மிகப்பெரிய எழுச்சியை பெற்று வருகிறார். அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது ரி20 போட்டியில் 41 பந்துகளில் சதம் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார் டிவால்ட் பிரெவிஸ்.
அதுமட்டுமல்லாமல் இந்த சதத்தின் மூலமாக 9 புதிய சாதனைகளை படைத்திருக்கிறார். 56 பந்துகளில் 125 ஓட்டங்களை விளாசியதன் மூலமாக தென்னாப்பிரிக்கா அணிக்காக ரி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களை விளாசிய வீரர் என்ற டூ பிளசிஸ் சாதனையை தகர்த்துள்ளார். அதேபோல் ரி20 கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக ஓட்டங்களை விளாசிய சென்னை கப்டன் ருதுராஜ் சாதனையையும் பிரெவிஸ் முறியடித்துள்ளார்.
ரி20 கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியா மண்ணில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக சதம் விளாசிய முதல் வீரர் பிரெவிஸ் தான். அதேபோல் ரி20 கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியா மண்ணில் ஷேன் வாட்சன் 124 ரஓட்டங்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனையை டிவால்ட் பிரெவிஸ் 125 ஓட்டங்கள் எடுத்து முறியடித்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் டிவால்ட் பிரெவிஸ் 8 சிக்சர்களை விளாசி தள்ளினார். இதன் மூலமாக ரி20 கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 சிக்சர்களுக்கு மேல் விளாசிய முதல் தென்னாப்பிரிக்கா வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 22 வயதிலேயே ரி20 கிரிக்கெட்டில் சதம் விளாசியதன் மூலமாக, தென்னாப்பிரிக்கா அணிக்காக இளம் வயதில் சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
டிவால்ட் பிரெவிஸ் இன்னும் ஓராண்டில் உச்சக்கட்ட ஃபார்முக்கு திரும்புவார் என்று பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பிரெவிஸை வாங்கியுள்ள சிஎஸ்கே அணி, அடுத்ததாக எஸ்ஏ20 லீக் தொடரில் வாங்க முயற்சித்து வருகிறது. அதற்காகவே மும்பை அணியில் இருந்து பிரெவிஸை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருக்கிறது. இதனால் எஸ்ஏ20 லீக்கிலும் இனி சிஎஸ்கே அணிக்காக பிரெவிஸை பார்க்கலாம்.