இலங்கையில் சட்டப்பூர்வமாக கஞ்சா பயிரிட ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கடுமையான நிபந்தனைகளின் கீழ் அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக ஆயுர்வேதத் துறையின் முன்னாள் ஆணையர் ஜெனரல் டொக்டர் தம்மிக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை முதலீட்டு வாரியத்தின் கீழ் ஒரு திட்டமாக இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக 37 விண்ணப்பதாரர்களில் இருந்து இந்த ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் இலங்கை முதலீட்டு வாரியம் அவர்களுக்கு சட்டப்பூர்வ அனுமதியை வழங்கியுள்ளது.
ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் முதல் கட்டத்தில் ஆறு மாதங்களுக்கு தற்காலிக உரிமம் வழங்கப்பட்டுள்ளது. முன்னேற்ற அறிக்கைகளின் அடிப்படையில் பயிரிடல் காலத்தை நீட்டிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இலங்கையில் பயிரிடப்படும் அனைத்து கஞ்சாவும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் அது மருந்து உற்பத்தி சோதனை நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முதலீட்டு வாரியம் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த முயற்சியால் அரசாங்கம் கணிசமான அந்நியச் செலாவணி வருவாயை ஈட்ட முடியும் என டொக்டர் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.