கனடாவில் காட்டுத்தீ அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
கனடாவில் உருவான நூற்றுக்கணக்கான கட்டுப்பாடற்ற காட்டுத்தீயிலிருந்து கிளம்பும் புகை கனடா ,அமெரிக்கா முழுவதும் கடுமையான காற்றின் தர எச்சரிக்கைகளை ஏற்படுத்தியுள்ளன.
சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir இன் தரவரிசையின்படி, டெட்ராய்ட், மிச்சிகன் மற்றும் கனேடிய நகரங்களான மாண்ட்ரீல், டொராண்டோ ஆகியவை திங்களன்று உலகின் மிக மோசமான காற்றின் தரத்தைப் பதிவு செய்தன.
கனடா முழுவதும் தற்போது 700க்கும் மேற்பட்ட காட்டுத்தீகள் எரிந்து வருகின்றன , அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு இப்போது கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக, அரசு நிறுவனங்களுக்குச் சொந்தமான ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான கனடியன் இன்டரான்சி ஃபாரஸ்ட் ஃபயர் சென்டர் (CIFFC) தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் கனடா முழுவதும் பல இடங்களில் காட்டுத்தீ பரவியதால், பல இடங்களில் மக்கள் வெளியேற்றப்பட்டனர். வடக்கு மானிடோபாவில், காட்டுத்தீ காரணமாக நிசிச்சவயாசிக் க்ரீ நாட்டிற்கு முழுமையான வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் விளைவாக வான்கூவர் தீவின் கிழக்கு கடற்கரையில் 400க்கும் மேற்பட்ட சொத்துக்கள் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளன . தீ பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியாவிலிருந்து வடமேற்கே 90 கி.மீ தொலைவில் உள்ளது.
சஸ்கடூன் நகரிலிருந்து வடக்கே சுமார் 500 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சஸ்காட்சுவான் கிராமமான பைன்ஹவுஸும் இந்த வாரம் வெளியேற்ற உத்தரவின் கீழ் இருந்தது. நாட்டில் மிகப்பெரிய தீ விபத்துக்கள் இப்போது சஸ்காட்சுவான் , மனிடோபா மாகாணங்களில் உள்ளன, 100,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான பரப்பளவில் தீ அபாயம் உள்ளது.
அந்தத் தீயின் புகை அமெரிக்காவுடனான கனடா எல்லையில் தொடர்ந்து பரவி வருகிறது. திங்களன்று, மிச்சிகன், அயோவா, மினசோட்டா, விஸ்கான்சின், நெப்ராஸ்காவின் சில பகுதிகள் மற்றும் இல்லினாய்ஸ் மற்றும் இந்தியானாவின் பகுதிகளுக்கு காற்றின் தர எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன. காட்டுத்தீ காரணமாக கிழக்கு மாநிலங்களான நியூயார்க், வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர் ,
மைனே ஆகிய பகுதிகளிலும் உள்ள மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.