தமிழ் சினிமா இயக்குனர் வேலு பிரபாகரன் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.
கடந்த சில நாட்களாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார்.
முன்னதாக நேற்று அவரது மரண செய்தி வதந்தியாக பரவியபோது, அவரது உறவினர்கள் அதை மறுத்து, அவர் மருத்துவர்கள் கண்கணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினர்.
எனினும் எதிர்பாராதவிதமாக இன்று அதிகாலை அவர் இயற்கை எய்தினார்.
பல வித்தியாசமான, சர்ச்சைக்குரிய படங்களை எடுத்த வேலு பிரபாகரனுக்கு வயது 68.
திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர் என பன்முகத் திறமையுடன் தமிழ்த் திரைப்பட துறையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர் வேலு பிரபாகரன்.
அவரது திரைப்பயணமும், தனிப்பட்ட வாழ்க்கையும் பல்வேறு ஏற்றஇறக்கங்கள் நிறைந்தது.
வேலு பிரபாகரன், 1980-ம் ஆண்டு வெளிவந்த ‘இவர்கள் வித்தியாசமானவர்கள்’ என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக திரையுலகில் கால் பதித்தார்.
இயக்குநராக அவர் தனது முதலாவது முயற்சியாக 1989-ம் ஆண்டு ‘நாளைய மனிதன்’ திரைப்படத்தை இயக்கினார்.
இது வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து 1990-ல் ‘அதிசய மனிதன்’ என்ற படத்தை வெளியிட்டார்.
பின்னர் ‘அசுரன்’, ‘ராஜாகிளி’ போன்ற படங்களை இயக்கினார்.
பதினாறு, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், கடாவர், பீட்சா 3, ரெய்டு, வெப்பன், கஜானா என பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
வேலு பிரபாகரன் முதலில் பி. ஜெயாதேவி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
அதன் பின்னர், 2017-ல் தனது 60வது வயதில் ‘காதல் காதல்’ திரைப்படத்தில் அவருடன் பணியாற்றிய இளம் நடிகை ஷிர்லி தாஸை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமணம் அப்போது சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதங்களை ஏற்படுத்தியது.