இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய ஆட்சேர்ப்புகள் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், நிறுவனத்திற்குள் மனித வளங்களைக் குறைக்க முடிந்ததாக அவர் தெரிவித்தார். தற்போது பணிபுரிபவர்கள் தங்களது தொழில் குறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.
“2012 ஆம் ஆண்டில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் சுமார் 3,290 ஊழியர்கள் இருந்தனர். ஆனால் தற்போது பல விடயங்களுக்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம். முன்பு போல பலர் பணிபுரிய வேண்டிய தேவை இருக்காது. எங்கள் புதிய பணியாளர் கட்டமைப்பின்படி, தற்போதுள்ள சுமார் 3,290 மனிதவளம் 2,031 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஊழியர்களில் பலர் இந்த வருடமும் அடுத்த வருடமும் ஓய்வு பெறுவார்கள். அவர்கள் ஓய்வு பெறும்போது, புதியவர்கள் வருவதில்லை. புதிய ஆட்சேர்ப்புகளை நிறுத்திவிட்டோம். பல திறமையற்ற சேவைகளை நிறுத்திவிட்டோம். எனவே, இப்போது அந்த நபர்களின் தேவைப்பாடு எமக்கு அவசியப்படாது.”