ஆசனங்கள் உடலில் பிராண சக்தி ஓட்டத்தை சீராக நிகழ்த்துவதுடன் வாழ்விலும் சமநிலையைப் பேண உதவுகின்றன. நின்ற நிலையில் செய்யக்கூடிய ஆசன வரிசையில் திரிகோணாசனம் பற்றி பார்க்கலாம். இந்த ஆசனத்தில் நிலைபெறும் போது மூன்று முக்கியமான முக்கோணங்களை அவதானிக்கலாம். மூன்றுக்கும் அதிகமான முக்கோணங்களை பலரும் கணிப்பதுண்டு. எத்தனை முக்கோணங்கள் என்பதை விட எவ்வாறு நாம் சமநிலையைப் பேணி ஆசனத்தின் பலாபலன்களைப் பெற்றுக் கொள்கிறோம் என்பதே இங்கு முக்கியமானது.
யோகாசன ஆரம்ப காலங்களில் கற்றுக் கொண்ட ஏகபாதாசனம், திரிகோணாசனம் போன்ற சமநிலைப்பேண வேண்டிய ஆசனங்களைத் திறம்படச் செய்வதன் மூலம் வாழ்வில் ஏற்படும் சவால்களை திறம்பட கையாளும் திறமை வந்து சேர்கிறது.. முக்குணங்களாக இருக்கும் இராஜச, தமச குணங்களில் இருந்து யோகிகளுக்கு அமைந்துவிடும் சாத்வீக குணத்திற்கும், இறுதியில் எக்குணமுமற்ற நிர்குணமான சாட்சிநிலை விழிப்புணர்வே நாம் என்ற ஞானம் வருகிறது. மும்மலங்களை வென்னு இந்நிலைக்கு வர வேண்டியிருக்கிறது.
செய்யும் முறை ; உடலை வளைக்காது நேராக நிற்கவும்., உடல் அமைப்பு, வளையும் தன்மைக்கு ஏற்ப கால்களுக்கு இடையில் இரண்டு அல்லது மூன்று அடி இடைவெளி (30 பாகை அல்லது 45 பாகை) வரும்படியாக விரித்து வைக்க வேண்டும். கைகளை இருபக்கமும் நிலத்திற்கு சமாந்தரமாக உயர்த்தவும். இடது பக்கமாக செய்யும் போது இடது பாதத்தை 90 பாகையளவிலும் வலது பாதத்தை 45 பாகை அளவிலும் திருப்ப வேண்டும். இப்போது மூச்சை உள் எடுத்தபடி இடுப்பை இடப்பக்கமாக பக்கவாட்டில் நகர்த்தி மூச்சை மெதுவாக வெளிவிட்ட படி இடது கைவிரல்களால் இடது கணுக்காலைத் தொட வேண்டும். முடிந்தவர்கள் தரையைத் தொடலாம். கைகள் நேர் கோட்டில் இருக்க வேண்டும். தலை மேலே பார்த்தபடி இருக்க வேண்டும். இந்நிலையில் இயல்பான சுவாசத்தைப் பேண வேண்டும். ஆரம்பத்தில் முடிந்த அளவு நேரம் நிற்கலாம். படிப்படியாக கால அளவை அதிகரிக்கலாம். மூச்சை உள் இழுத்தபடி பழைய நிலைக்கு வர வேண்டும். இதே போல் வலப்பக்கமாகவும் செய்ய வேண்டும். முழுஉடலும் இவ்வாசன நிலையில் ஒரே தளத்தில் இருக்க வேண்டும். அதாவது உடல் முன்புறமாக வளைவதைத் தவிர்க்க வேண்டும். சுவரோடு செய்வதாக கற்பனை செய்தால் முழுஉடலும் சுவரைத் தொட வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.


ஆசனம் செய்ய முன் உடலைத் தளர்த்தும் பயிற்சிகளைச் செய்வதும், மெதுவாக வளைவதன் மூலம் சமநிலையைப் பேணுவதும் முக்கியமானது.
பயன்கள்; கை,கால், கணுக்கால், முழங்கால், தோள் மற்றும் மார்பு உறுதியடைகிறது. இடுப்பு பகுதியின் வளையும் தன்மை மேம்படுகிறது. முதுகுத்தண்டு நரம்புகளைத் தூண்டி விடுகிறது. பதற்றம், மனஅழுத்தம், முதுகுவலி குறைவடைகிறது. சமிபாட்டு பிரச்சனைகள், வாய்வுத் தொல்லை நீங்க உதவுகிறது.
யாரெல்லாம் செய்யக் கூடாது; ஆசனங்கள் யோக ஆசிரியரின் வழிகாட்டுதலில் செய்வதே பொருத்தமானது. சில உடல் உபாதைகள் உள்ளவர்களுக்கு குறிப்பிட்ட சில ஆசனங்களைச் செய்வது உகந்ததாக இருக்காது. அந்த வகையில் திரிகோணாசனத்தை முதுகுத்தண்டுவட சில்லு இடம் பெயரந்துவர்கள் (slip disc) செய்யக் கூடாது. அதேபோல் இடுப்பு, முழங்கால், கணுக்கால், கழுத்து போன்ற பகுதிகளில் பிரச்சனை உள்ளவர்கள் யோக ஆசிரியரின் ஆலோசனையின் பெயரில் இவ்வாசனத்தை செய்ய வேண்டும். இரத்த அழுத்தம் மற்றும் இதய சம்பந்தமான நோய் உள்ளவர்கள் மருத்துவர் மற்றும் யோக ஆசிரியரின் ஆலோசனையின் பெயரில் இலகுவான முறையில் இவ்வாசனத்தை செய்து பயனைப் பெறலாம்.