வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (8) இடம்பெற்றது.
வடக்கு மாகாணத்தின் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஆளுநர் அதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதையும் குறிப்பிட்டார். வடக்கு மாகாணத்தின் எதிர்காலத் தேவைகளையும் கருத்தில்கொள்ளும்போது குறிப்பாக முதலீட்டு வலயங்களை வடக்கில் ஆரம்பிக்க உள்ள நிலையில் அவற்றுக்கும் குடிநீர் தேவை என்பதால், அதையும் கருத்திலெடுக்க வேண்டும் என ஆளுநர் சுட்டிக்காட்டினார். அத்துடன் தீவகப் பிரதேசங்கள் சுற்றுலா ரீதியாக அபிவிருத்தி செய்யும்போது அங்கும் குடிநீருக்கான கேள்வி அதிகரித்துச் செல்லும் எனவும் அதனை நிவர்த்திக்கும் வகையில் கடல்நீரை நன்னீராக்கும் செயற்பாடுகளை அங்கு அதிகரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கைக்கும், ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான தொடர்பு ஏற்பட்டு 60 ஆண்டுகள் அடுத்த ஆண்டுடன் நிறைவு செய்யப்படவுள்ளதைக் குறிப்பிட்ட ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் இலங்கையுடனான தமது உறவுகள் – திட்டங்கள் தொடரும் எனவும் தெரிவித்தனர். அத்துடன் தமது எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும், குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கான குடிநீர்த் திட்டம் தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்துக்கான குடிநீர்த் திட்டம் எவ்வளவு விரைவாக மக்களைச் சென்றடைய முடியுமோ அவ்வளவு விரைவாகச் சென்றடைவதற்கு ஏதுவான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியினர் குறிப்பிட்டனர்.