Tuesday, March 10, 2026 4:45 pm
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் 62 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் ஏனைய மாவட்டங்களைக் காட்டிலும் யாழ்ப்பாணத்திலேயே மோசடிகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன என யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.பி.எஸ்.ஜெயமகா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் விசேட குற்றவிசாரணைப் பிரிவில் கடந்த வருடம் 225 மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக இடம்பெறும் மோசடிகள், இணையக் குற்றங்கள் ஊடாக இடம்பெறும் மோசடிகள், காணி மோசடிகள், ஒன்லைன் மோசடிகள் என்பனவே கணிசமானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடிகள் மூலம் 62 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளது. அவற்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 200 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இத்தகைய மோசடிகள் அண்மைக்காலமாக மீண்டும் யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றன. வெளிநாட்டு வாழ்க்கையில் மக்களுக்கு இருக்கும் ஆசையை மோசடியாளர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறான மோசடியாளர்களிடம் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

