Saturday, October 25, 2025 7:58 pm
வடக்கு கிழக்கில் அரச மற்றும் தனியார் காணிகள் அபகரிக்கப்படமாட்டாது என அநுர அரசாங்கம் கூறி வந்தாலும், தொடர்ந்தும் காணி அபகிரிப்புகள் இடம்பெறுகின்றன. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பிரதேசத்தில், 600 ஏக்கர் காணிகளை சுற்றுலா அபிவிருத்தி என்ற போர்வையில் அபகரிக்கும் முயற்சியை கைவிடுமாறு மணக்காடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று சனிக்கிழமை மணக்காடு கிராம அமைப்புகள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், காணி அபகரிப்பை கைவிடுமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளனர். மக்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் பற்றியும் எடுத்துரைத்தனர்.
வடமராட்சி கிழக்கு மணக்காட்டு பிரதேசத்தில் கற்கோவளத்திற்கும் மணல்காட்டுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் 300 ஏக்கர் காணியும், மணக்காட்டுக்கும் பொற்பதி கிராமத்துக்கும் இடைப்பட்ட பிரதசத்தில் 300 ஏக்கர் காணியும் சுற்றுலா அபிவிருத்தி என்ற போர்வையில் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
குறித்த கிராமங்களில் வாழும் மக்கள் பலருக்குக் காணிகள் இல்லை. அரச காணிகளை பிரதேச மக்களுக்கு வழங்காமல், கொழும்மை மையமாகக் கொண்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா மையங்களுக்கு குத்தகைக்கு கைளிக்க முடியாது என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
தனியாருக்கு காணிகள் வழங்கும் வழங்குவதை கிராம மக்கள் கடுமையாக எதிர்ப்பதாகவும் எப்படியும் தடுத்து நிறுத்துவோம் எனவும் செய்தியாளர் சந்திப்பில் மக்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள், மற்றும் காணி அபகரிப்பு விடயத்தில் ஈடுபடும் தரப்புக்கும் தெளிவாக கூறியுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் இதனை தடுக்க முன்வர வேண்டும் எனவும் மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

