Friday, March 20, 2026 10:54 am
சுதந்திர தினத்தன்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூவரிடம் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு சுமார் 5 மணி நேரம் விசாரணை நடாத்தி வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட மூன்று மாணவர்களை விசாரணைக்கு வருமாறு பல்கலைக்கழக பதிவாளர் ஊடாக கடந்த 13ஆம் திகதி திகதியிடப்பட்டு, 16ஆம் திகதி காலை 09.30 மணிக்கு விசாரணைக்கு சமூகமளிக்க வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், கடிதம் 17ஆம் திகதியே பதிவாளரால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து மாணவர்களுக்கு ஏதுவான நேரத்தை அறிவித்து, வருமாறு கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று மாணவர்கள் வாக்குமூலம் அளிப்பதற்காக யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையம் சென்று இருந்தனர்.
இந்தநிலையில், மாணவர்களிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவர்களிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர்.
பெறப்பட்ட வாக்கு மூலங்களின் அடிப்படையில், அவை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

