Friday, March 27, 2026 1:41 pm
நேபாள அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்த பழமைவாதக் கட்சிகளின் ஆதிக்கத்தை வீழ்த்தி 35 வயதான ராப் இசைக்கலைஞர் பாலேந்திர ஷா இன்று அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.
கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட எழுச்சிமிக்கப் போராட்டங்களுக்குப் பிறகு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் பாலேந்திர ஷாவின் ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சி (Rastriya Swatantra Party) அமோக வெற்றி பெற்றது.
‘பாலென்’ என மக்களால் அழைக்கப்படும் இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். 2013-ல் ராப் இசைப் போட்டிகளில் பங்கேற்றுப் புகழ்பெற்ற இவர் தனது பாடல்கள் மூலம் நேபாளத்தின் ஊழல் மற்றும் சமூகச் சீர்கேடுகளைத் தொடர்ந்து விமர்சித்து வந்திருந்தார்.
2022-ஆம் ஆண்டு காத்மாண்டு மாநகர மேயராகச் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றதே இவரது அரசியல் வாழ்வின் முதல் திருப்புமுனை. நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் கோட்டையான ஜாப்பா தொகுதியிலேயே அவரை வீழ்த்தி பாலேந்திர ஷா சாதனை படைத்துள்ளார்.
இளைஞர்களின் நம்பிக்கையாக உருவெடுத்துள்ள இவர் தனது பதவியேற்புக்கு முன்னதாக ‘நேபாளம் சிரிக்கிறது’ என்ற ராப் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஒரு சாதாரண ராப் பாடகராகத் தொடங்கி இன்று நேபாளத்தின் அதியுயர் பதவியை அலங்கரித்துள்ள பாலேந்திர ஷா ஒட்டுமொத்த தெற்காசிய அரசியலையுமே வியப்புடன் பார்க்க வைத்துள்ளார்.

