Thursday, February 12, 2026 11:07 am
2026 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ் தெரிவித்தார்.
வாக்காளர்கள் தகுதி பெறும் திகதியாக பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி கருதப்படுவதாகவும், அத்திகதியில் 18 வயது பூர்த்தியடைந்த மற்றும் அப்பிரதேசத்தில் வசிப்பதை உறுதிப்படுத்தியவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளும் வசதி காணப்படுகின்றது.
வாக்காளர் பட்டியலுக்கான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு, வீடு வீடாகச் சென்று தரவுகளை சேகரிக்கும் முறை உள்வாங்கும் மற்றும் நீக்கும் முறைமை ஆகியவை பின்பற்றப்படுகின்றது.
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளம் ஊடாக ஈ-சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதில் தற்போது 2026 ஆம் ஆண்டிற்கான வரைபு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு பொதுமக்கள் தமது பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பரிசீலித்துப் பார்க்கும் வசதி காணப்படுவதுடன், ஒருவேளை தமது பெயர் உள்வாங்கப்படாவிடின், அங்குள்ள ஆலோசனைகளுக்கு அமைய கணக்கொன்றை ஆரம்பித்து கோரிக்கைகளை முன்வைக்கும் வசதி காணப்படுகின்றது.
கோரிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உரிய கிராம உத்தியோகத்தர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தமது தகவல்கள் தொடர்பில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின், இந்த இணையத்தளம் ஊடாக அது தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்கும் வசதி காணப்படுகின்றது.
அனைத்து கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் தற்போது 2026 வரைபு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் ஊடாகவும் தமது பெயர் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பரிசீலிக்கும் வசதி காணப்படுகின்றது.
வாக்காளர் இடாப்பிற்காக பிரதேச ரீதியாக தகவல்களை சேகரித்தல் பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இடம்பெறுகின்றது.
கிராம உத்தியோகத்தர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் ஊடாக உள்வாங்கல் மற்றும் நீக்கல் பட்டியல்களைத் தயாரித்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு ஒப்படைத்தல் மார்ச் 03 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
தகவல்களுக்கு அமைய பெயர் பட்டியலை மீண்டும் பட்டியலிட்டு மே 5 ஆம் திகதி முதல் ஜூன் 01 ஆம் திகதி வரை 28 நாட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.அதற்கமைய தமது பெயர் தகுதி பெறும் பட்டியலில் இல்லாவிடின், இந்த 28 நாட்களுக்குள் அவர்களுக்கு மீண்டும் உரிமை கோரும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

