Friday, October 31, 2025 4:22 am
இலங்கைத்தீவில் ஆக குறைந்தது இரண்டு மில்லியன் மக்கள் நீரழிவு நோயுடன் வாழ்வதாக கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சத்திரசிகிச்சை பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ரெஸ்னி காசிம் (Rezni Cassim) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆபத்து தொடர்பாக இலங்கை மருத்துவர் சங்கத்துக்கு (Sri Lanka Medical Association – SLMA) அறிவித்துள்ளதுடன், உரிய தடுப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டிய அவசர அவசிய நிலைமைகள் பற்றியும் சங்கம் ஆராய்ந்து வருகிறது. மக்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
புற்று நோய் மற்றும் நீரழிவு நோய் பற்றிய ஒரு குறிப்பிடத்தக்க ஒப்பீட்டு ஆய்வை பேராசிரியர் ரெஸ்னி காசிம் நீண்டகாலமாக மேற்கொண்டார். இந்த இரண்டு நோய்களும் அமைதியாக அதிகரித்து காலப்போக்கில் மோசமாகி, இறுதியில் மரணத்தை தோற்றுவிக்கும் எனவும், பேராசிரியர் விளக்கினார்.
ஒவ்வொரு ஆண்டும் 40,000 பேர், நீரழிவு நோய்க்கு உள்ளாவதாகவும் பேராசிரியர் ரெஸ்னி காசிம் தெரிவித்துள்ளார். இது ஆபத்தான புற்று நோயைவிடவும் மிகவும் ஆபத்தானது என்றும் பேராசிரியர் எடுத்துரைத்தார்.
சுமார் 100,000 நீரிழிவு நோயாளிகள் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் பலர் ஒரு காலை துண்டிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளதாக கூறிய பேராசிரியர் ரெஸ்னி காசிம், நீரிழிவு நோயாளியின் காலில் ஒரு சிறிய காயம் ஏற்பட்டால் கூட, அது பாரிய பாதிப்புக்கு வழிவகுக்கும் என்றும் சொன்னார்.
இந்த நோயினால் ஒரு கால் துண்டிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகளுக்குள் அடுத்த காலை ஒரு நோயாளி இழக்கப்படுவதற்கு 30% வாய்ப்பு உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்குள் 66% வாய்ப்பு உள்ளது என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.
புற்றுநோய்களினால் சுமார் 30% நோயாளிகள் ஒரு வருடத்திற்குள் இறக்கின்றனர். ஆனால் நீரிழிவு நோயால் ஒரு காலை இழந்தவர்களில், 35% பேர் மட்டுமே நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரும் உயிர் வாழ்கின்றனர். அதாவது மூன்றில் இரண்டு பங்கு அந்த நேரத்தில் இறந்துவிடுவதாக பேராசிரியர் கூறுகிறார்.
பேராசிரியரின் இந்த ஆய்வு பற்றி, இலங்கை மருத்துவர் சங்கம், சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
கொழும்பு மருத்துவர் சங்கத்தில் இடம்பெற்ற நிகழ்வில், பேராசிரியர் ரெஸ்னி காசிம் இந்த இரண்டு நோய்களின் ஆபத்துகள் பற்றிய விளக்கத்தை வழங்கினார்.


