மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் இந்தியாவில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் கில் தலைமையிலான இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், 121 ஓட்டங்கள் என்ற இலக்கை வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்திய அணி வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரரான கே.எல். ராகுல் 58 ஓட்டங்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியுள்ளது.
போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 518 ஓட்டங்கள் எடுத்தபோது முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டு மேற்கு இந்தியாவை துடுப்பெடுத்தாடப் பணித்தது. ஜெய்ஷ்வால் 175 ஓட்டங்களும், கில் ஆட்டமிழக்காமல் 129 ஓட்டங்கலும் எடுத்தனர்.
மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெற்களையும் இழந்து 248 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்து, ஃபாலோ ஆன் பெற்றது. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய, ஜான் கேம்பெல் 116 ஓட்டங்களும், சாய் ஹோப் 103 ஓட்டங்களும் எடுத்தனர் , மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெற்களையும் இழந்து 390 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் வரை நடப்பு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுற்றில், 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்வி , ஒரு போட்டியில் சமனை பதிவு செய்திருந்தது. இதன் மூலம், 55.56 வெற்றி சதவிகிதத்துடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றதால், வெற்றி சதவிகிதமானது 61.90 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆனாலும், தொடர்ந்து மூன்றாவது இடத்திலேயே நீடிக்கிறது. அவுதிரேலியா 100 வெற்றி சதவிகிதத்துடனும், இலங்கை 66.67 வெற்றி சதவிகிதத்துடன் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருகின்றன.
அடுத்த மாதம் தென்னாப்ரிக்காவில் நடைபெற உள்ள இந்திய அணியின் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முடிவுகள் அடிப்படையிலுமே, முதல் இரண்டு இடங்களுக்கும் கில் தலைமையிலான அணி முன்னேறுவது அமைய உள்ளது.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியில் முதல் இரண்டு முறை இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறினாலும், சம்பியனாகும் வாய்ப்பை இழந்தது. அதேநேரம், கடந்த முறை இறுதிப்போட்டிக்கு கூட முன்னேற முடியவில்லை. இந்த சூழலில் 2027ம் ஆண்டு நடைபெற உள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முன்னேற இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.
நவம்பர் 14ம் திகதி தொடங்கி 26ம் திகதி வரை திட்டமிடப்பட்டுள்ள, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த தொடரை கில் தலைமையிலான அணி 2-0 என கைப்பற்றினால், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது.