Sunday, March 22, 2026 6:31 pm
ஈரானில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய போராட்டங்களில் பங்கேற்ற 19 வயது மல்யுத்த வீரர் சலே முகமதி உள்பட 3 பேர் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சயீத் தாவூதி , மெஹ்தி காசெமி ஆகியோருடன் சேர்த்து சலே முகமதிக்கு ஹோம் நகரில் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஜனவரி 8-ஆம் திகதி போராட்டத்தின் போது இரண்டு காவலர்களை கொன்றதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஈரான் மனித உரிமைகள் அமைப்பு மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் போன்ற அமைப்புகள் இந்த தண்டனைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சித்திரவதை செய்யப்பட்டு பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையிலும், முறையான தற்காப்பு வாதங்கள் இன்றி நடத்தப்பட்ட போலி விசாரணைகள் மூலம் இந்த தண்டனை வழங்கப்பட்டதாக அந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
மல்யுத்த வீரர்களை இலக்கு வைப்பதன் மூலம் மக்களிடையே அச்சத்தை உருவாக்கி, போராட்டங்களை ஒடுக்க ஈரான் அரசு முயல்வதாக புகார்கள் எழுந்துள்ளன. சர்வதேச விளையாட்டு அமைப்புகள் ஈரானுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

