Monday, December 15, 2025 11:44 am
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் இடம்பெற்ற யூத மத கொண்டாட்ட நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந் நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் , துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய 50 வயதுடைய தந்தை கொல்லப்பட்டதாகவும் , அவரது மகன் 24 வயது இளைஞன் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு தாக்குதல்தாரியை பொது மகன் ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து பிடித்திருந்தார். பின்னர், உயிரிழந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் வாகனத்தில் வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) மதியம் இத் துப்பாக்கிச் சூடானது ஒரு பயங்கரவாதச் செயல் என அதிகாரபூர்வமாக அறிவித்தது. அவுஸ்திரேலிய பிரதமரும் இது ஒரு யூத எதிர்ப்புச் செயல் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இத் தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் பல்வேறு தகவல்களை கண்டறிந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

