Wednesday, October 29, 2025 10:51 pm
பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ ( Rio de Janeiro) என்ற மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், விற்பனையாளர்கள் ஆகியோரை கைது செய்யும் இராணுவ நடவடிக்கைகளின் போது 132 பேர் கொல்லப்பட்டதாக பிரித்தானிய ஆங்கில ஊடகமான இன்டிபென்டன்ட் (independent) இன்று புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை பற்றி பிரேசில் மாநில பொது பாதுகாப்பு அலுவலகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதேநேரம் ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் பலத்த கண்டனம் வெளியிட்டுள்ளன.
60 பேர் உயிரிழந்ததாக பிரேசில் அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. எனினும் பிரேசில் அரசின் பொது பாதுகாப்பு அலுவலகம் 40 பேரின் உடல்களை உறவினர்களிடம் கையளித்துள்ளது. இதன் பின்னர் பெறப்பட்ட உண்மையான புள்ளிவிபரங்களில் 132 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது என்று பொது பாதுகாப்பு அலுவலகம் கூறியுள்ளது.
அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள், அதன் ஊடாக குற்றச் செயல்களை தடுக்க, பிரேசில் அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது.
கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற தேடுதல் – சோதனை நடவடிக்கைகளில் இரண்டாயிரத்து 500 பொலிஸாரும், ஆயிரத்துக்கும் அதிகமான பிரேசில் இராணுவத்தினரும் கூட்டாக செயற்பட்டனர்.
நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 93 துப்பாக்கிகள் மற்றும் பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேவேளை உயிரிழப்பு எண்ணிக்கை 132 அல்ல என்றும், அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா மனித உரிமைச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. கண்டித்துமுள்ளது.
ஆனாலும் பிரேசில் அரசு மனித உரிமைச் சபையின் புள்ளி விபரங்களை மறுத்துள்ளது. 132 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர் என்றும், அதுவும் போதைப் பொருள் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட நிலையில், குற்றவாளிகள் இராணுவத்தினரை தாக்க முற்பட்டபோது உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் பிரேசில் அரசு விளக்கமளித்துள்ளது.
ஆனாலும் பிரேசில் அரசை நோக்கி கண்டனங்கள் எழுவதாக கூறி, என்டிரிவி (NDTV) என்ற இந்திய ஆங்கில தெலைக்காட்சி விவரணக் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளது.

