Saturday, November 15, 2025 10:01 am
இலங்கைத்தீவின் தென் மாகாணம் மாத்தறை மாவட்டத்தில் உள்ள கந்தர பிரதேசத்தில் 11 பேருக்கு கொலை அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக புலனாய்வு தகவல்களை மேற்கோள் காண்பித்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தர பிரதேசத்தை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் மூலமாகவே இக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று புலனாய்வுத் தகவல்கள் கூறுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த போதைப்பொருள் கடத்தல்காரர் தற்போது டுபாயில் வாழ்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஈடுபடுவதாகவும் கூறியுள்ள பொலிஸார், கொலை அச்சுறுத்தல் உள்ள 11 பேருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர். வெளியில் செல்ல வேண்டாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.
கந்தர பொலிஸ் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை இரவில் இருந்து, எதிர்வரும் 72 மணித்தியாலத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என புலனாய்வு பிரிவினர் நம்பகமாக தெரிவித்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தென்பகுதியில் பாரிய அளவில் கைப்பற்றப்பட்ட பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள், டுபாயில் வாழும் குறித்த போதைப்பொருள் கடத்தல்கார் மூலம் அனுப்பப்பட்டவையாக இருக்கலாம் என பொலிஸார் கூறுகின்றனர்.
ஏழு மாதங்களுக்கு முன் தெவுந்தர தேவாலயத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் கந்தர பிரதேசத்தில் தொடர்ந்து பெரும் பதற்றம் நிலவுகிறது.
இத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட யோமேஸ் என்பவரின் அண்ணன் நேற்று முன்தினம் புதன்கிழமை அங்குனுகொலபெலஸ்ஸ அதி பாதுகாப்பு சிறைச்சாலையில் கழுத்து வெட்டி கொலை செய்ய முயற்சித்த போது தப்பியுள்ளார். காயங்களுடன் தங்காலை வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இக் கொலை முயற்சிச் சம்பவம் தொடர்பாக அவருடைய பெற்றோர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

