Friday, November 14, 2025 9:20 pm
இலங்கைத்தீவின் கிழக்குப் பகுதியில், நிலைகொண்டுள்ள குறைந்த மட்ட வளிமண்டலத் தாழமுக்கத்தின் காரணமாக சில மணிநேரங்களில், இலங்கையின் பல பகுதிகளிலும் பரவலாக இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இத் தாழமுக்கத்தினால் வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் சுமார் 100 மில்லி மீற்றர் வரையான பலத்த மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம்.
இந்த மாகாணங்களில் பலவற்றில் நாளை அதிகாலை வேளையில் பனிமூட்டமான தன்மைகள் தென்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்போது ஏற்படக் கூடிய பாதிப்புக்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

