Friday, November 7, 2025 7:37 pm
மாகாண சபைத் தேர்தல் செலவுகளுக்காக சுமார் பத்து பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஆனால் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக தன்னால் தீர்மானிக்க முடியாது என்றும் ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
மாகாண சபைத் தேர்தல் முறைமை (Provincial Council Election System) தொடர்பாக 2017 ஆம் ஆண்டில் இருந்து பேசப்பட்டு வரும் நிலையில், பொருத்தமான தேர்தல் முறைமை (Appropriate System) ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு எதிர்க்கட்சிகளிடம் அநுரகுமார திசாநாயக்க வேண்டுகோள் விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகள், அரசாங்கத்தின் மக்கள் நலன்சார் திட்டங்களை ஆதாரிக்க வேண்டும் என்ற தொனியில், அநுரகுமார திஸாநாயக்க தனது உரையின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தினார்.
நிதி அமைச்சர் என்ற முறையில் 2026 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை சமர்ப்பித்த ஜனாதிபதி, இலங்கைத்தீவின் நிதி நிலைமைகள் பற்றியும், 2032 ஆம் ஆண்டுக்குள் கடன்களை 90 சதவீதமாக குறைக்கும் திட்டங்கள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.
மாகாண சபைத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, தனது மகிழ்ச்சியை வெளியிட்ட ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஊழல் மோசடியாளர்களுடன் ஒருபோதும் இணையமாட்டார் என்றும் சுட்டிக்காட்டினார். சஜித் மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
சஜித்துக்கு நன்றியும் தெரிவித்தார். சஜித் பிரேமதாச அமைதியாக இருந்து ஜனாதிபதியின் உரையை செவிமடுத்தார்.

