வரலாற்று புகழ் பெற்ற கண்டி ஸ்ரீ தலதா வழிபாட்டிற்குச் சென்ற மக்களால் கண்டி நிரம்பி வழிகிறது.கண்டியில் ஏற்கனவே சுமார் 400,000 யாத்திரிகர்கள் கிவிந்துள்ளனர்.
இன்று கண்டிக்கு வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஸ்ரீ தலதா மாளிகையை சுற்றியுள்ள வீதிகளில் குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன, பொலிதீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள், உணவுப் பொதி பெட்டிகள் கடுதாசிகள் என்பன ஆங்காங்கே சிதறிக்கிடகின்றன.
யாத்திரிகர்கள் பொலிதீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்களை வீதியில் விட்டுச் செல்வதால், துப்புரவுப் பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றுவது கடினமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சுகாதார பிரச்சனையாகி நோய் கிருமிகள் பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
வழிபாட்டுக்குச் சென்ற நான்கு பேர் மரணமானதாகவும், 42 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூன்று பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும், மற்றுமொரு பெண்மணி முச்சக்கரவண்டியொன்று மோதியதில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அம்பிட்டிய பகுதியில் வரிசையில் நின்றிருந்த பெண்ணொருவரும் ஆணொருவரும், கட்டுக்கஸ்தோட்டை நகருக்கு அருகில் வரிசையில் நின்றிருந்த பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.
கண்டி போதனா வைத்தியசாலையில், கடந்த சில தினங்களில் சுகவீனமுற்ற 420 யாத்திரிகர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
ஸ்ரீ தலதா மாளிகையில் புனித பல் சின்னத்தை காண சென்ற பௌத்த பக்தர்கள் குழு உள்ளூர் முஸ்லிம் மசூதிக்குள் ஓய்வெடுக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.