யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற பணிப்பகிஷ்கரிப்பை
பொதுமக்கள் நலன் கருதி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தளர்த்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சிகிச்சைகளை இடைநிறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
அரச வைத்திய அதிகாரிகளின் தாய்ச் சங்கத்துடன் யாழ் போதனா வைத்தியசாலைக் கிளைச் சங்கம் தற்போதைய நிலைமை பற்றிக் கலந்துரையாடிய பின்னர் , நேற்றுக் காலை பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு நேற்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் கிளினிக்குகள், வெளி நோயாளர் பிரிவு மற்றும் பிற சேவைகள்நேற்று மாலை 4 மணி முதல் வழக்கம் போல் செயற்படும்.
அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகளின் பாதுகாப்பை முன்னுறுத்தி , கலந்துரையாடலின் போது பணிப்பாளரினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தத் தவறும் பட்சத்தில் முன்னறிவிப்பின்றி முழு அளவில் எமது தொழில் சங்க நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம் – என்றுள்ளது.