மனதை ஒருநிலைப்படுத்தி, முழுஉடலின் சக்திநிலையை மேம்படுத்த பல ஆசனங்கள் உண்டு, அவற்றில் முக்கியமான ஒரு ஆசனம் வீரபத்திராசனம் ஆகும். இதனை ஆங்கிலத்தில் warrior pose என்று அழைப்பார்கள். இவ்வாசனம் மூன்று வேறுபட்ட நிலைகளில் வீரபத்திராசனம் – 1 , 2, 3 எனப் பெயரிடப்பட்டு செய்யப்படுகின்றன. முழு உடலுக்குமான ஒரு சிறந்த ஆசனமாக இந்த வீரபத்திராசன வரிசை அமைகிறது. ஆரம்பத்தில் உடலைத் தளர்த்தும் பயிற்சிகளின் பின் இவ்வாசனங்களைச் செய்வது நல்லது. பல நாள் பயிற்சியின் பின்னரே ஆசனத்தின் பூரண நிலையைப் பலரும் பொதுவாக அடைவதுண்டு. ஆரம்பத்தில் உடல் தன்னால் முடிந்ததை மட்டும் செய்ய அனுமதிக்க வேண்டும். காலப்போக்கில் திருப்திகரமான ஆசனநிலையை அடைவதை நீங்களே உணரலாம்.
வீரபத்திராசனம் – செய்யும் முறை
- தரைவிரிப்பின் ஒரு பக்கத்தில் முதலில் தடாசனத்தில் கால்கள் ஒன்றாக இருக்க நிமிர்ந்து நிற்க வேண்டும். மூச்சை வெளிவிட்டவாறு கால்களுக்கிடையில் செய்பவரின் வசதிக்கேற்ப, 3 அல்லது 4 அடி இடைவெளி வருமாறு நிற்க வேண்டும். கைகளை தமக்கிடையில் சமாந்தரமாகவும், நிலத்திற்கு செங்குத்தாகவும் இருக்க மேலே தூக்க வேண்டும்.
- இடது பாதம் 45 அல்லது 60 பாகையில் வலப்புறமாகவும், வலது கால் 90 பாகையில் வலப்புறமாகவும் திருப்ப வேண்டும். பாதங்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மூச்சை வெளிவிட்டவாறு உடலின் மேற்பகுதியையும் வலப்புறமாகத் திருப்ப வேண்டும்.
- பாதங்கள் உறுதியாக நிலத்தில் பதிந்திருக்கும் நிலையில், மூச்சை வெளிவிட்டவாறு, வலது முழங்காலை மடிக்க, கணுக்காலும் முழங்காலும் நேர்கோட்டிலும், விரிப்புக்கு செங்குத்தாகவும் இருக்கும் நிலைக்கு வர வேண்டும். மேலே தூக்கிய கைகளோடு உடலின் மேற்பகுதியும் நீட்டப்பட்ட நிலையை உணர வேண்டும். கைகளை கூப்பிய நிலையிலோ, சமாந்தரமாகவோ வைத்திருக்கலாம். முகத்தை நிமிர்த்தி கைகளைப் பார்க்கலாம். இயல்பான மூச்சில் முடிந்த அளவு நேரம் இருக்கலாம். இது வீரபத்திராசனம் – 1 என அழைக்கப்படுகிறது.

- இப்பொழுது இயல்பான மூச்சுடன், உயர்த்தப்பட்ட வலதுகை முன்புறமாகவும், இடதுகை பின்புறமாகவும் தரைவிரிப்பிற்கு சமாந்தரமாக இருக்க நீட்ட வேண்டும். உள்ளங்கை கீழ்நோக்கி இருக்க வேண்டும். விரிப்பின் முன்புறமாக திருப்பப்பட்டிருந்த இடுப்புப் பகுதி இப்போது விரிப்புக்கு சமாந்தரமாக இருக்கும். இந்த நிலை வீரபத்திராசனம் – 2 என்று அழைக்கப்படும்.
- இந்த நிலையில் இருந்து வலதுகாலை நேராக்கும் அதே நேரம், நிலத்தில் ஊன்றியுள்ள இடது காலையும் மேலே தூக்கி, முன்னோக்கி இருகைகளையும் நீட்டி இடக்காலுடன் நேர்கோட்டில் நிலத்திற்கு சமாந்தரமாக வரும் இந்நிலை வீரபத்திராசனம் – 3 என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் முடிந்த அளவு நேரம் இயல்பான மூச்சில் மனக்குவிப்புடன் இருந்தபின், இடதுகாலையும் கைகளையும் படிப்படியாக இறக்கி வலது காலுடன் சேர்ந்து நிமிர்ந்து நிற்கும் தடாசனத்திற்கு வர வேண்டும்.
- இந்நிலையில் ஆழமான மூச்சில் உடலைத் தளர்த்தியபின், இடது புறமாகவும் இம்மூன்று வீரபத்திராசன நிலைகளைச் செய்வதன் மூலம் ஆசனம் நிறைவுக்கு வரும்.


மூன்று நிலைகளின் பொதுவான பயன்கள் ;
- மார்பு, சுவாச உறுப்புகள் , தோள், கழுத்து, கைகள், இடுப்பு எனப்பல பகுதிகள் நீட்சியை உணர்கின்றன.
- தோள், கைகள், பின்பக்க தசைகள் பலமடைகின்றன.
- கால்தசைகள், கணுக்கால் நீட்சியுடன் பலமும் பெறுகிறது.
- உடல்-மன ஒத்திசைவு இவ்வாசனத்தால் மேம்மடுகிறது.
- உடலுறுதியும் சமநிலையும் மன குவிப்பையும் அடைய முடிகிறது.
- முழு உடலும் சக்தியூட்டப்படுகிறது.
- இரத்த ஓட்டத்தினதும் சுவாச செயற்பாட்டினதும் திறன் அதிகரிக்கிறது.
யோக ஆசனங்கள் ஒரு குருவின் வழிகாட்டுதலில் செய்யப்பட வேண்டியவை. வீரபத்திராசனத்தை உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் மற்றும் கால், முழங்கால், தோள் போன்ற பகுதிகள் பாதிக்கப்பட்டவர்கள் செய்யாதிருப்பது நல்லது.. தோள்வலி உள்ளவர்கள் கைகளை மேலே தூக்காமல் நிலத்திற்கு சமாந்தரமாக வைத்திருக்கலாம். அதே போல் கழுத்து வலி உள்ளவர்கள் தலையை உயர்த்தி மேலே பார்க்காமல் முன்னே பார்க்கலாம். வைத்தியரின் ஆலோசனையின் படி செய்வதே எப்போதும் நல்ல முடிவாக இருக்கும்.
வீரபத்திராசனம் – 1