ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கத்துடன் சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த 10 பங்களாதேஷ் நாட்டவர் கட்டுநாயக்கவின் ஆண்டியம்பலம் பகுதியில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவால் 24 ஆம் திகதி திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.
20 முதல் 30 வயதுக்குட்பட்ட அனைத்து ஆண்களும் பெப்ரவரியில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு ஆரம்பத்தில் பங்களாதேஷில் இருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்தனர்.
வருகை விஸா முறையின் கீழ் பெறப்பட்ட சுற்றுலா விஸாக்களில் அவர்கள் இலங்கைக்குள் நுழைந்தனர், ஆனால் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு அப்பால் தங்கியிருந்தனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் முதற்கட்ட விசாரணையில், இந்தக் குழு இலங்கையில் இருந்து துபாய்க்குச் சென்று, பின்னர் எகிப்துக்குள் நுழைந்து, இறுதியில் மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவை அடைய முயன்றதாகத் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் வெலிசர தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின்படி, நாடுகடத்தல் நடவடிக்கைகள் முடியும் வரை அவர்கள் காவலில் இருப்பார்கள் என்று குடிவரவு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.