ஆர்சிபி அணியின் உரிமையாளரான பிரிட்டனின் டியாகோ நிறுவனம், அந்த அணியை விற்பனை செய்ய முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆர்சிபி அணியின் மதிப்பு 17,762 கோடி ருபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை வாங்க சீரம் நிறுவனம் சிஇஓ அதார் பூனாவாலா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18வது சீசனில் ஆர்சிபி அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனால் ஆர்சிபி அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். பெங்களூரின் ஒவ்வொரு தெருக்களிலும் ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், அடுத்த நாள் நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
இருந்தாலும் ஐபிஎல் வெற்றிக்கு பின் ஆர்சிபி அணியின் மதிப்பு உச்சத்திற்கு சென்றது. 5 முறை சம்பியன் பட்டத்தை வென்ற சிஎஸ்கே , மும்பை ஆகிய அணிகளின் மதிப்பை விடவும், ஆர்சிபி அணியின் மதிப்பு முதலிடத்திற்கு சென்றது.
டியாகோ குரூப்பின் இந்திய சிஇஓ, ஆர்சிபி அணியை நிர்வகிப்பது சுவாரஸ்யமான ஒன்று. ஆனால் டியாகோ நிறுவனத்தின் முக்கிய தொழிலாக கிரிக்கெட் அணி இல்லை என்று கூறி இருந்தார். இதனால் விரைவில் ஆர்சிபி அணி கை மாற்றப்படலாம் என்று கூறப்படது. அந்த வகையில் ஆர்சிபி அணியை வாங்குவதற்கு சீரம் நிறுவன சிஇஓ அதார் பூனாவாலா ஆர்வம் காட்டி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவரும் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே லண்டனுக்கு சென்று செட்டிலாகியவர் தான். கடந்த ஆண்டு குஜராத் அணியின் 67 சதவிகித பங்குகளை டோரண்ட் குரூப் கைப்பற்றி, புதிய உரிமையாளர்களாக மாறியது.
ஆர்சிபி அணியை முதலில் விஜய் மல்லையா தான் வாங்கி இருந்தார். அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற பின், பிரிட்டனைச் சேர்ந்த டியாகோ நிறுவனம் வாங்கியது. ஆர்சிபி அணி சாம்பியன் அந்தஸ்துடன் இருப்பதால், அந்த அணியின் மதிப்பு உச்சத்தில் உள்ளது. இதனால் மிகப்பெரிய தொகைக்கு ஆர்சிபி அணியை விற்கலாம் என்று டியாகோ கணக்கிட்டுள்ளதாக தெரிகிறது. வரும் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் கூடுதலாக சில அணிகள் இணையக் கூடும். அதற்கான நடவடிக்கைகளில் பிசிசிஐ தீவிரமாக இருக்கிறது. அதனால் ஆர்சிபி அணியை 17,762 கோடி ரூபா கொடுத்து வாங்குவதை விடவும், புதிதாக ஒரு அணியை எளிதாக ஏலத்தில் வாங்கிவிடலாம் என்றும் பார்க்கப்படுகிறது.