வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் புதிய நிர்வாகம் நேற்று (20) இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவு செய்யப்பட்டது.
இதன்படி வடக்கு, கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் தலைவராக யோகராசா கனகரஞ்சினியும் செயலாளராக சிவானந்தன் ஜெனிற்றாவும் உப தலைவராக வல்லிபுரம் அமலநாயகியும் உப செயலாளராக செபஸ்டியாம் தேவியும் பொருளாளராக கதிர்காமநாதன் கோகிலவாணியும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதே போன்று புதிய நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டதுடன் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களுக்கும் தனித்தனியாக மாவட்ட தலைவர்களும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் என்பது உறவுகளைத் தேடுகின்ற நீதி கோருகின்ற ஒரு அமைப்பாகவே எப்போதும் பயணிக்கும். இதில் இருக்கும் நபர்கள் மாறிச் செல்லலாம். ஆனாலும் இந்த அமைப்புக்காக உருவாக்கப்பட்ட சின்னத்தையோ கடிதத் தலைப்பையோ தனி நபர்கள் எவரும் உரிமை கோரமுடியாது.
ஆகையினால் ஒரு கட்டமைப்பாக சிறந்த முறையில் செயற்பட்டு வருகின்ற இந்த அமைப்பானது எமது உறவுகளைத் தேடுகின்ற, சர்வதேச நீதியை கோருகின்ற, இனத்திற்கான செயற்பாடுகளை தொடர்ந்தும் முழு வீச்சோடு அனைவரது ஒத்துழைப்புடனும் முன்னெடுத்துச் செல்லும் என வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.