சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சனிக்கிழமை (30) செம்மணியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றலிலிருந்து இன்றைய தினம் காலை 11 மணியளவில் பேரணியாக சென்று, மனித புதைகுழிகள் காணப்படும் செம்மணி நோக்கி இந்த மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம், தமிழின அழிப்புக்கும் வலிந்து காணாமலாக்கப்படுதலுக்கும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்தும் சர்வதேச சுயாதீன விசாரணையைக் கோரி வட கிழக்கில் இன்றைய தினம் ஆர்ப்பாட்ட பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த போராட்டத்தில், பொது அமைப்புக்களும் தமிழ்த் தேசியப்பரப்பில் உள்ள ஒட்டுமொத்த தமிழ்க் கட்சிகளும், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமது முழுமையான ஆதரவை வழங்கி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






