முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து மே 18ம் திகதி வரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.
இதன் முதல் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை வல்வெட்டித்துறையில் உள்ள ஆலடி பகுதியில் இடம்பெற்றது.
பல்கலைக்கழக மாணவர்களால் அப்பகுதி மக்களிடம் அரிசி சேகரிக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு சிரட்டைகளில் பொதுமக்களுக்கும் வீதியில் சென்றவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இதே வேளை கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
மேலும் வவுனியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் இக் கஞ்சி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
அத்தோடு முல்லைத்தீவு முள்ளியவளை சந்தியம்மன் ஆலயம் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காச்சி வழங்கும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மேலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வடமராட்சி கிளையினரின் ஏற்பாட்டில் நெல்லியடி பேருந்து நிலையத்தில் வைத்து முள்ளிவாயக்கால் கஞ்சி காய்ச்சி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.