காலாவதியான விஸாஅனுமதிகளின் கீழ் இலங்கையில் சட்டவிரோதமாக வசித்ததற்காக 22 இந்தியர்கள் கொண்ட குழுவை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை (10) கைது செய்துள்ளனர்.
இந்தக் குழு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு நாட்டிற்கு வந்திருந்தது. அவர்களில் 17 பேர் சுற்றுலா விஸாக்களிலும், 4 பேர் குடியிருப்பு விஸாக்களிலும், ஒருவர் வணிக விஸாவிலும் வந்திருந்தனர்.
குடிவரவு புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்திற்கிடமான இரண்டு இந்திய பிரஜைகளிடம் திடீரென நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஏனையவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் தற்போது மிரிஹானாவில் உள்ள தற்காலிக தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் உடனடியாக இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளனர்.