யாழ்.மாவட்டச் செயலக முன்றலில் ‘இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் திண்மக் கழிவகற்றல் நிலையத்திற்கு எதிராக இன்று காலை 10.30 மணியளவில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இப் போராட்டம் சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டதுடன் அரசியல் கட்சியினர், சிவில் சமூக அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்தில் பிரதேச சபையினர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கழிவுகளை கொட்டி வருகிறார்கள்.
உரிய அனுமதிகள் பெறப்படாமல் இந்த நிலையம் இயங்குவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், அண்மையில் அந்த நிலையம் தீப்பற்றி எரிந்து மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியிருந்தது. இது முதல் தடவை அல்ல என்பதுடன் பல தடவைகள் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்குரிய மாற்று ஏற்பாடுகள் சபையில் பேசப்பட்டாலும் நடைமுறையில் எவையும் சாத்தியப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.