முன்னாள் பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னக்கோனை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, அவர் தற்போது காணாமல் போயுள்ளதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தற்போது காணாமல் போயுள்ளதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
வரவுசெலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, முன்னாள் பொலிஸ் மா அதிபரின் கைது நிலை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த துணை அமைச்சர் வட்டகல, பொலிஸார் இந்த விவகாரத்தை சுயாதீனமாக கையாள்வதாகக் கூறினார்.
இதேவேளை மாத்தறை நீதவான் நீதிமன்றம் முன்னாள் ஐஜிபி தேசபந்து தென்னகோனுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறை விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஹோகந்தர , கிரியுல்லவில் அமைந்துள்ள தேசபந்து தென்னகோனின் வீடுகளில் விசாரணை அதிகாரிகள் சோதனை நடத்திய போதிலும், அந்த வீடுகளில் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற செய்திகளைத் தொடர்ந்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 31, 2023 அன்று மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள W15 ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், கொழும்பு குற்றப் பிரிவின் (CCD) முன்னாள் அதிகாரிகள் மற்றும் முன்னாள் ஐஜிபி தேசபந்து தென்னகோன் உட்பட 8 பேரைக் கைது செய்யவும், அவர்களை சந்தேக நபர்களாகப் பெயரிடவும் மாத்தறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.