தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பராமரிப்பில் இருந்தபோது தாய்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட முத்துராஜா என்ற யானை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படாது என்று தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.
பல காயங்களுக்கு சிகிச்சை பெற்ற பிறகு யானை நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் என்ற உறுதிமொழியுடன், முத்துராஜா 2023 இல் இலங்கையிலிருந்து தாய்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டது. யானை இப்போது முழுமையாக குணமடைந்துள்ளதாக தேசிய மிருகக்காட்சிசாலையின் இயக்குநர் ஜெனரல், கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் சந்தன ராஜபக்ஷ ஆகியொர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு, யானையின் நிலையை மதிப்பிடுவதற்காக தாய்லாந்து அரசின் அழைப்பின் பேரில் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையைச் சேர்ந்த மருத்துவக் குழு தாய்லாந்துக்குச் சென்றது. அந்த நேரத்தில், தாய்லாந்து அதிகாரிகள் குழு ஒன்று, யானை நன்றாக குணமடைந்து வருவதாக இலங்கை குழுவிடம் தெரிவித்தது.
இருப்பினும், தாய்லாந்து அரசு பின்னர், முத்துராஜாவை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அந்நாட்டு மன்னர் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தது.
முத்துராஜா முன்னதாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் சுமார் நான்கு மாதங்கள் சிகிச்சை பெற்றது. அந்த நேரத்தில் அவரது காயங்கள் இன்னும் குணமடைந்து வருவதாக இயக்குநர் ஜெனரல் ராஜபக்ஷ தெரிவித்தார்.