உத்தரப் பிரதேச மாநிலத்தில் 75 முதியவர், 35 வயதுப் பெண்ணை மணந்தார். திருமணம் முடிந்து முதலிரவும் நடந்தேறிய அடுத்த நாள் காலையே அவர் மரணமடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக அந்த தாத்தாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் இறுதிச் சடங்குகளை நடத்தாமல் நிறுத்தி வைத்திருப்பதால் பரபரப்பு கூடியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள குச்முச் கிராமத்தில்தான் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இறந்த முதியவரின் பெயர் சங்க்ரூராம். இவரது மனைவி ஓராண்டுக்கு முன் இறந்து விட்டார். இதையடுத்து சங்க்ரூராம் தனியாக வாழ்ந்து வந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. விவசாயம் செய்து பிழைப்பை நடத்தி வந்தார்.
தனது கடைசிக் காலத்தில் தன்னைப் பார்க்க ஒரு பெண் இருந்தால் நல்லாருக்குமே என்று நினைத்த அவர், மறுமணம் செய்ய முடிவு செய்தார். ஆனால் இதற்கு உறவினர்களும் குடும்பத்தினரும் சம்மதிக்கவில்லை. அது சரியாக வராது என்று அவர்கள் கூறினார். ஆனால் சங்க்ரூராம் அதை நிராகரித்தார்.
செப்டம்பர் 29, ஆம் திகதி திங்கட்கிழமை அன்று, ஜலாலபூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதான மான்பாவதி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் நீதிமன்றத்தில் திருமணத்தைப் பதிவு செய்துவிட்டு, பின்னர் உள்ளூர் கோவிலில் பாரம்பரிய சடங்குகளையும் செய்தனர்.
திருமணம் முடிந்து முதலிரவும் வந்தது. மறு நாள் காலை விடிந்தபோது சங்க்ரூராம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தத் திடீர் மரணம் கிராமத்தில் பல ஊகங்களையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை இயல்பாக நடந்தது என்று கூறினாலும், வேறு சிலர் இதில் சந்தேகம் இருப்பதாக கூறுகிறார்கள். டெல்லியில் வசிக்கும் மருமகன்கள் உட்பட அவரது உறவினர்கள், சங்க்ரூராமின் இறுதிச் சடங்குகளை நிறுத்தி வைத்துள்ளனர். தாங்கள் வந்து சேர்ந்த பின்னரே இறுதிச் சடங்குகள் நடக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.