தன்னுள் உறையும் இறைத்தன்மையை உணர மனிதன் பல வழிகளில் பயணிக்கிறான். சகல வழிகளும் அவனை ஒரு புள்ளிக்கே அழைத்துச் செல்கின்றன.
சகல மக்களும் ஞானம் பெறும் வகையாக சரியை, கிரியை வழிகளில் ஆலய தொண்டு, வழிபாடு, விரதங்கள் என பலவழிகளும் சிறப்பாக அவனை ஞான நிலைக்கு இட்டுச் செல்கி்ன்றன.
சரியை, கிரியை போன்ற சாத்திரப் பாதைகளை மாட்டுவண்டியின் வேகத்துடனும், கிரியா யோகப் பாதையை ஆகாயவிமான வேகத்துடனும் ஒப்பிட்டுக் கூறுகிறார் பரமஹன்ச யோகானந்தர் தனது ‘ஒரு யோகியின் சுயசரிதை’யில்.
இதனால் தான் தனது சிறிய வயதில் சாமியார்களுடன் இணைந்து சமய, தத்துவங்களில் தேர்ச்சி பெற்றும் திருப்தி அடையாத கிரியா மூலகுருவான பாபாஜி நாகராஜ், சித்தர் போகநாதரைச் சந்திப்பதற்காக கதிர்காமத்திற்கான நீண்ட பயணத்தை மேற்கொண்டார். பின்னர் சொருப சமாதியடைந்த வரலாறு யாவரும் அறிந்ததே.
யோக மார்க்கமானது தன்னுள் இறைத்தன்மையை உணரும் அனுபவ ஞானமாகும்.
நம்முள் ஒவ்வொரு கணமும் வந்து போகும் மூச்சில் இருக்கும சூட்சுமத்தை விளக்குவது யோகம். இதனை ஆசன, பிராணாயாம, தியான வழிகளில் அமைதியாக்கி மூச்சற்ற சமாதி நிலைக்கு இட்டுச் சென்று இறை சக்தியுடன் ஒன்றும் ஆனந்த நிலையை அடைய வழிகாட்டுவது யோகம்.
மாணிக்கவாசகர் திருவாசகத்திலும், திருமூலர் திருமந்திரத்திலும் விளக்கியுள்ளது அக வழிபாடாகும்.
மாணிக்கவாணகர் அருளிய கீர்த்தித் திருவகவலில்,
‘அரியொடு பிரமற்களவறி யொண்ணான்
நரியைப் குதிரை ஆக்கிய நன்மையும்’
என்று வருகிறது.
நரியைக் குதிரை செய்வானும்,
நரகரைத் தேவு செய்வானும்,
விரதம் கொண்டு ஆட வல்லானும்,
விச்சு இன்றி நாறு செய்வானும்,
முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட,
முன் பணிந்து அன்பர்கள் ஏத்த,
அரவு அரைச் சாத்தி நின்றானும்-
ஆரூர் அமர்ந்த அம்மானே. – நாவுக்கரசர்
நரிபுரி காடரங் காநட மாடுவர்
வரிபுரி பாடநின் றாடும்எம் மானிடம்
புரிவரி வரிகுழல் அரிவைஓர் பான்மகிழ்ந்
தெரிஎரி யாடிதன் இடம்வலம் புரமே – சுந்தரர்
பிராண வாயுவுக்கு குதிரை எனும் பரிபாஷை உள்ளது. இதனை திருமூலர் உட்பட பல சித்தர்களும் தமது பாடல்களில் பயன்படுத்தியுள்ளார்கள். இங்கே தேவார பதிகங்களிலும் காண முடிகிறது.
படைப்புக்கும், காத்தலுக்கும் காரணமான, பிரமனும் விஷ்ணுவும் மூலாதார சக்தியை தூண்டி இல்லற வாழ்வில் ஈடுபட வைக்கின்றனர். நரி போன்ற அபான வாயுவைத் தூண்டி உலகியலில் ஈடுபட வைக்கின்றனர். விழிப்புணர்வால் மூலாதார சக்தி மேல் நோக்கி பயணிப்பது குதிரைக்கு ஒப்பிடப்படுகிறது. மூல வாயு மேலே செல்ல வாசியாக மாறுகிறது. தேகத்தைக் கடந்த ஆகாய அறிவால் மட்டுமே சிவத்தை அறிய முடியும்.
நரியைக் குதிரையாக்கியது என்பது ஒரு பரிபாஷையாகும். இதனையே நாயன்மார்களும் சித்தர்களும் செய்தார்கள். செய்கிறார்கள். சாத்திரப் பாதையில் பயணிப்பவர்களுக்கு இவை புராணக் கதைகளாக சொல்லப்படுகின்றன.
இதனால் தான் இந்த பரிபாஷை பலரால் எடுத்தாளப்பட்டது. சிவனே குருவாக வந்து யோக தீட்சை அழித்ததே மாணிக்கவாசகருக்கு குருந்த மரநிழலில் நடந்தது.
நாம் நம்மை உணர்வதற்கான சூட்சுமம் நம் மூச்சில் இருக்கிறது. அது உலகியலில், சக்தி நீக்கத்தால் வீணாகி மடிகிறதா, இல்லை மேலேற்றி இறைநிலையை உணர்கிறதா என்பது நம் கையில் இருக்கிறது.
ஒரு ஆமை நிமிடத்துக்கு 4 முறை சுவாசித்து 300 ஆண்டுகள் கூட வாழ்கிறது. காட்டு நரிகளின் ஆயுட்காலம் 3-5 ஆண்டுகள் மட்டுமே. ஆமையின் அடக்கமும், நரியின் சவாலான வாழ்வும் நமக்கு பல விடயங்களை கற்றுத் தருகிறது.
வாழ்வில் ஏற்படும் சவால்களால் மனநிம்மதி இழத்தல், கோபம், பொறாமை, ஆணவம், பற்று என பல நம் பிழையான அடையாளங்களில் சக்தி இழப்பது மட்டுமின்றி, நோய்களுக்கும் ஆளாகிறோம்.
இதே சக்தியை மேலேற்றி நம்மை உணரும் போது இறைநிலை நம்மில் இறங்குவதோடு, ஆரோக்கியமான வாழ்வும் சாத்தியமாகிறது.