மருதானை ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு திட்டம் இன்று திங்கட்கிழமை (15) காலை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் தொடங்கப்பட்டது.
“வளரும் தேசம் – அழகான வாழ்க்கை” என்ற அரசாங்கத்தின் உத்தி, கிளீன் ஸ்ரீ திட்டம் ஆகியவற்றின் திட்டத்தில் 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் தேசிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சும், கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்துடன் இணைந்து பொது-தனியார் கூட்டாண்மை மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், நிலையான, நவீன ,தரப்படுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து அமைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ரயில் நிலையங்களில் பொது வசதிகளை மேம்படுத்துதல் , அவற்றை பாதுகாப்பான, வசதியான மற்றும் கவர்ச்சிகரமான இடங்களாக மாற்றுதல், மக்களின் சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கு பங்களித்தல் ஆகியவை இதன் நோக்கங்களாகும்.
மரதானை ரயில் நிலைய நவீனமயமாக்கல் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நினைவுப் பலகையை திறந்து வைத்தார். கட்டுப்பாட்டு அறை உட்பட பல பகுதிகளை பார்வையிட்ட ஜனாதிபதி, நிலையத்தின் ஆய்வு சுற்றுப்பயணத்தையும் மேற்கொண்டார்
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துணை அமைச்சர் பிரசன்ன குணசேன, மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசூப், கொழும்பு மேயர் வ்ரே காலி பால்தசார், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மூத்த பேராசிரியர் கபில சி. பெரேரா, இலங்கை ரயில்வே பொது மேலாளர் ரவீந்திர பத்மபிரியா, மூத்த அரசு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், ரயில்வே துறை அதிகாரிகள், கிளீன் ஸ்ரீலங்கா செயலக அதிகாரிகள், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.