( பதஞ்சலி யோக சூத்திரத்தொடர்)
மனம் ஒரு குரங்கு என்று கூறுவார்கள். ஒரு எண்ணக் கிளையில் இருந்து இன்னொன்றுக்கு தாவிக் கொண்டே இருக்கும். உடல் ஒன்று செய்ய, மனம் வேறு உலகில் சஞ்சரிக்கும். மனம், வாக்கு, காயத்தால் கோபம், ஆசை, தேவையற்ற கற்பனை என்று பல துன்பங்களும் கர்மவினைகளும் சேர்ந்து கொள்கின்றன. இதே மன, வாக்கு, காயத்தை நேர்வழியில் ஒருமுகப்படுத்தி விழிப்புணர்வுடன் ஒரு செயலைச் செய்யும் போது வினைத் துன்பங்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது. பற்றற்று செயல் புரியும் இவர்கள் மலஇருள் நீங்கிய ஞானிகள் ஆகின்றனர். இதனைத் திருமூலர் பாடலில் காணலாம்.
மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்
மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
மனவாக்குக் கெட்டவர் வாதனை தன்னால்
தனைமாற்றி ஆற்றத் தகுஞானி தானே .
இந்த இடர் காலத்தில் பலவிதமான பிரச்சனைகளுக்கும் நாம் முகங்கொடுத்து வருகிறோம். பக்தி மயமாய் மன அமைதிக்காக வழிபாட்டு தலங்களுக்கும் செல்ல வழியில்லை. உண்மையில் இக்காலம் நம் இறைத்தன்மையை உணரத் தடையாக இருக்கும் காரணிகளை விலக்கி ஆத்ம விசாரணையை ஆரம்பிக்க ஒரு நல்ல காலமாகும். இந்த வகையில் பதஞ்சலி யோக சூத்திரம் வழி ஒரு தேடலை சாத்தியமாக்கலாம்.
சித்தத்தின் விருத்திகளை நிறுத்துதலே யோகம் என்று வரையறுக்கிறார் பதஞ்சலி முனிவர், இதன் மூலம் ஜூவாத்மா(புருஷன்) தன் உண்மை நிலையை அடைகிறது. இதுவரை மனதின் விருத்திகள் மூலம் உருவான போலியான ஒரு அடையாளம் முடிவுக்கு வருகிறது. தானும் சிவமும் வேறல்ல என்ற ஞானம் கிடைக்கிறது.
நான் உடல், மனம், என்னுள் புதைந்துள்ள எண்ணங்களின் வெளிப்பாடு என்ற சாதாரண உணர்வு நிலையில் இருக்கும் மனிதர்கள் தம்மை, தாம் வைத்திருக்கும் சொத்து, தொழில், சமூகத்தில் தமது நிலை மற்றும் அங்கீகாரம், தனது படிப்பு, தோற்றம், தனது சிறப்பு தகுதிகள், உறவு, பரம்பரை, நம்பிக்கை, நாடு, இனம், சமயம், தத்துவங்கள் ஊடாக தம்மை அறிமுகப்படுத்துவார்கள் அல்லது அடையாளப்படுத்துவார்கள். இவை எதுவுமே நாமல்ல என்பதே உண்மையாகும். இந்த உண்மையை உணர்ந்து சரணடைவதே ஆன்மீக வளர்ச்சிக்கு நாம் எடுத்து வைக்கும் முதல் அடியாக இருக்க முடியும். வெளியில் நிகழும் சம்பவங்கள், அனுபவங்கள் அதனால் எழும் உணர்வுகளைத் தாண்டி எதனையும் சமநிலை நின்று சாட்சி நிலையில் நோக்கும் போது ஆன்மார்த்தமான எம் சுயத்தை உணரலாம். ஆனால் இந்நிலையில் எம்மால் எப்போதும் நிலைத்திருக்க முடிவதில்லை. இங்கே தான் அட்டாங்க யோகம், கிரியா யோகம், தன்னலமற்று செயற்படும் கர்ம யோகம், பூரணமாய் இறைவனுடன் சரணாகதியடையும் பக்தி யோகம் எனப்பல யோகங்களும் எம்மை அறியும் பயணத்திற்கு துணை நிற்கின்றன.
சித்தம் எண்ண அலைகளற்று அமைதியடைய ஆத்ம தரிசனம் சாத்தியமாகிறது.
இன்பமென்றும், துன்பமென்றும் எழும் இந்த மனவிருத்திகள் ஐந்து என்கிறார் பதஞ்சலி முனிவர் அவருடைய ஆறாவது சூத்திரத்தில்.
‘பிரமாண விபர்யாய விகல்ப நித்ரா ஸ்ம்ருதய’ யோக சூத்திரம் – 1.6
பிரமாணம்–இயல்பாக நாம் அறிந்து கொள்ளும் உண்மை அறிவு, விபர்யாய-பொய்யான அறிவு, விகல்பம்-ஒன்றை வேறொன்றாக நினைப்பதும் கற்பனையும், நித்ரா-தூக்கம், ஸ்ம்ருதய-நினைவுகள்.
அடுத்து வரும் சூத்திரங்களில் ஒவ்வொன்றாக விளக்கிச் செல்கிறார். உண்மை அறிவான பிரமாணம் மூன்று வழிகளினூடாக நாம் பெற்றுக் கொள்கிறோம். முதலாவது எமது புலன்களின் வழியாக வரும் விருத்தி. ஏரியில் படகு செல்வதை கண்களால் கண்டு உணர்வது. இரண்டாவதாக ஊகத்தின் அடிப்படையில் யோசித்து அறிந்து கொள்வது. மின்னல், இடியைப் பார்த்தும் கேட்டும் மழை வரப்போகிறது என ஊகிக்கிறோம். மூன்றாவது ஆகம பிரமாணம். இது தன்னை உணர்ந்த ஞானிகள் கண்டு உணர்ந்து எழுதிய உண்மையான சாட்சியங்களில் நூல்களில் இருந்து வருவது, என்று சிலரது விளக்கவுரைகளும், எமது பிறப்புகள் வழி இயல்பாக வரும் பரிணாம அறிவு என்று சிலரும் விளக்கம் தருகிறார்கள்.
கயிற்றை பாம்பென்று நினைத்துக் கொள்வது, இரண்டாவது விருத்தியான பொய்யான அறிவு. இன, மத, நிற அடையாளங்களை வைத்து மனிதர்களை எடை போடுவதும் முடிவுக்கு வருவதும் அடிப்படைகளற்ற பிழையான எண்ண விருத்திகளாகும். எதையும் பாரபட்சமின்றி, திறந்த மனத்துடன் அணுகுவதன் மூலம் உண்மை புலப்படுகிறது. எமது கருத்துக்கள், முடிவுகள், கல்வி அறிவு எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு ஒவ்வொரு கணத்தையும் ஒரு குழந்தையின் ஆவலுடன் அணுக வேண்டும். ஒவ்வொரு கணத்திலும் இறக்க வேண்டும். அப்பொழுது தான் ஒவ்வொரு கணத்திலும் புதிதாகப் பிறக்க முடியும்.
கற்பனை என்பது பதஞ்சலி முனிவர் கூறும் மூன்றாவது விருத்தி. நாம் சென்று வந்த சுற்றுலாவின் இயற்கைக் காட்சிகளை கற்பனை செய்யும் எண்ண ஓட்டம் மனதிற்கு அமைதியைத் தரக்கூடியது. கவிஞர்களின் கற்பனை வாசகர்களின் விருந்தாகிறது. கோபம், துயரம் போன்ற பலவீனமான மனநிலையில் உள்ளவரை சென்றடையும் செய்தியோ, கற்பனையோ கட்டுப்பாடற்ற விருத்தியாகி துன்பத்தையே விளைவிக்கிறது. வராத ஒரு வியாதியை வந்ததாக நினைத்து எண்ணங்கள் விரிவடையும் போது பயம், மனஅழுத்தம் என உண்மையாகவே வேறு நோய்களுக்கு ஆளாக வேண்டியேற்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பலரையும் நாம் இழந்து வருவது, அவர்களின் சி்ந்தனை ஓட்டம் எப்பொழுதும் போராட்டம் மற்றும் இழந்த தம் மக்களைப் பற்றியிருப்பதே. இவர்களும் சக மனிதர்கள் போன்று ஆனந்த வாழ்வுக்கு உரித்துடையவர்களே இவர்களுக்கு மனஅமைதியை ஏற்படுத்தக் கூடிய ஆலோசனைகளை தகுந்த சமூக சேவையாளர்களின் மூலம் வழங்க வேண்டும். இதன் மூலம் அவர்களின் மனநலம் மட்டுமின்றி ஆயுள் நலமும் பேணப்படும்.
நான்காவதாக தூக்கம். கனவுடன் கூடிய தூக்கம், ஆழ்ந்த தூக்கம் இரண்டுமே மனதின் செயற்பாடுகள் தான். தூங்கியெழுந்தும், ‘நன்றாகத் தூங்கினேன்’, ‘பல கனவுகள் தூக்கத்தில்’ என்று நாம் கூறுவது இதனால் தான். ‘தூங்காமல் தூங்கும்’ சமாதி நிலையில் மட்டுமே மனதின் செயற்பாடுகள் நிறுத்தப்படுகின்றன.
ஐந்தாவது விருத்தி நினைவுகள்(Memory). இது ஒரு வலிமையான விருத்தி. எமது நிகழ்கால அனுபவத்தை முழுமையாக, சரியாக, நேர்மையாக அணுகவிடாமல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை நினைவுகள். உதாரணமாக ஒரு அரசியல்வாதி நல்ல திட்டத்தையோ, தீர்வையோ அறிவிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரைப் பற்றிய கூடாத அபிப்பிராயம் எம் ஆழ்மனத்தில் முன்னரே போட்டு வைத்திருப்போமேயானால், அவரின் திட்டத்தை அல்லது தீர்வை திறந்த மனதுடன் அணுகுவதில் எம் ஆழ்மனப் பதிவுகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான மக்களும் சரி, அரசியல்வாதிகளும் சரி தமக்கென ஒரு கொள்கையை அல்லது தன்னைப் பற்றிய பிம்மத்தை ஆழ்மனத்தில் போட்டு வைத்து விடுகிறார்கள். ஒற்றுமையாக ஒரு திட்டத்தையோ தீர்வையோ பெறுவதில் இது தடையை ஏற்படுத்துகிறது. இது நண்பர்கள், உறவுகள், அரசுகள் என்று பலருக்கும் பலவித அனுபவங்களில், தாக்கத்தை ஏற்படுத்துவதை உணரலாம். அதனால் தான் நாம் குழந்தை மனத்துடன் ஒவ்வொரு கணத்தையும் அணுக வேண்டுமென்று கூறுவர்.
மனத்தை புறநிலைமனம்(conscious mind or objective mind), அகநிலை அல்லது ஆழ்மனம்(Subconscious mind or Subjective mind) மற்றும் அதிஉணர்வுநிலை மனம்(Super conscious mind) என மூன்றாக வகுப்பர். எமது நினைவுகள் ஆழ்மனதில் பதிவாகின்றன. அவை எப்படி எமது புறநிலை மனதின் அனுபவங்களில் தாக்கம் செலுத்துகின்றன என்று பார்த்தோம்.
நம் ஆழ்மனமானது நாம் போடும் எந்த செய்தியையும் தன்னுள் எடுத்து வைத்துக் கொள்ளக் கூடிய முட்டாள் என்று கூறுவார்கள். இதனால் தான் நாம் விழிப்புணர்வுடன் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் அணுக வேண்டும். பிறவி தோறும் தொடரும் எமது வினைப்பதிவுகளின் இருப்பிடம் இது. இங்கே நாம் எமது புறநிலை மனம் மூலம் நேர்மறையான, உண்மையான பதிவுகளை சாட்சி நிலையில் நின்று வடிகட்டியே அனுப்ப வேண்டும். புறமனம் நிகழ்காலம் என்றால், ஆழ்மனம் இறந்த காலம். நாம் அடைய வேண்டியது எதிர்காலமான அதிஉயர் உணர்வு நிலையான துரிய நிலை, அல்லது இறைநிலை. இங்கு தான் எமக்கு யோக மார்க்கம் வழி காட்டுகிறது. விஞ்ஞான பூர்வமாக எமது கர்ம வினைகளுக்குக் காரணமான தேவையற்ற ஆழ்மனப் பதிவுகளை அழி்ப்பதற்கு உதவுகிறது. எமது புற, அக, அதிஉணர்வு நிலைகள் ஒரு நேர்கோட்டில் பயணிக்க ஆரம்பிக்கிறது. எமது மனம்,வாக்கு, காயமும் ஒத்திசைந்து செயற்படுகின்றன. நித்திய ஆனந்த வாழ்வு அகத்தில் மலர்வதை உணரலாம்.