ஜோர்ஜியாவின் படுமி நகரில் நடந்த 3வது ஃபிடே மகளிர் உலகக் கிண்ண செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் வீராங்கனையான திவ்யா தேஷ் முக் சகநாட்டவரான கொனேரு ஹம்பியை வீழ்த்தி சம்பியனானார்.
திங்கட்கிழமை நடைபெற்ற டை-பிரேக்கர் சுற்றில் 38 வயதான கோனேரு ஹம்பியை எதிர்கொண்ட 19 வயதான திவ்யா மகளிர்சம்பியன் பட்டம் வென்ற முதலாவது இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார்
தொடக்கத்திலிருந்தே சமமாக இருந்த இந்தப் போட்டி, ஞாயிற்றுக்கிழமை சமநிலையில் முடிவடைந்து, இறுதிப் போட்டியை டை-பிரேக்கருக்குத் தள்ளியது.
டை-பிரேக்கின் முதல் விரைவு ஆட்டம் டிராவில் முடிந்தது, இரண்டாவது ஆட்டம், மற்றொரு முட்டுக்கட்டைக்குள் செல்வது போல் தோன்றியது. இருப்பினும், ஹம்பி சில தவறுகளைச் செய்ததால் நேர அழுத்தம் ஏற்பட்டது, அது திவ்யாவுக்கு சாதகமாக அமைந்தது.
அதை அவர் முழுமையாகப் பயன்படுத்தி வெற்றியைப் பெற்று இந்தியாவின் 88வது கிராண்ட்மாஸ்டரானார்.
திவ்யா டை-பிரேக்குகளை 1.5-0.5 என்ற கணக்கில் வென்று, வரலாற்றுப் புத்தகங்களில் தனது பெயரைப் பொறித்தார்.
ஹம்பி, ஆர். வைஷாலி ,ஹரிகா துரோணவள்ளி ஆகியோரின் பின்னர் திவ்யா நான்காவது பெண் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆனார்.