யோகம் என்ற சொல்லுக்கு பலவிதமாக வரைவிலக்கணங்கள் பல்வேறு யோக, ஞான நூல்களில் கூறப்பட்டுள்ளன. இணைப்பு, சேர்தல், முறைமை, தியானம், காண்பவனும் காட்சியும் ஐக்கியமாதல், சாந்தம் மற்றும் சமநிலை, விழிப்புணர்வுடன் செயற்படல், தன்னுணர்வில் நிலைபெறுதல், விடுதலைக்கான பாதை, இருமைகளில் (Dualities) இருந்து விடுதலை, உள்,வெளி மூச்சுகளின் இணைவு, சூரிய,சந்திர சக்திகளின் இணைவு என சிலவற்றைக் கூறலாம். ஆனால் சித்தத்தின் விருத்திகளை நிறுத்துதலே யோகம் என்று கூறும் பதஞ்சலி முனிவர் இதன் வழி நாம் பெறும் சமாதி நிலையையே யோகம் என்ற பொருளில் கூற வருகிறார் என்பதே பலரது கூற்றாகும்.
முதல் பாதமான சமாதி பாதத்தில் யோகத்தின் வரைவிலக்கணத்தோடு, தடைகளும் அவற்றைத் தாண்டி நாம் பெறும் பல்வேறு வகையான சமாதி அனுபவங்களையும் சூத்திரங்கள் வழி விபரித்திருந்தார். பயிற்சி மற்றும் பற்றின்மையால் இவற்றை அடையலாம் என்ற சூத்திரத்தின் விரிவாகவே இரண்டாவதான சாதனை பாதத்தைத் தருகிறார். முதலும் முக்கியமானதுமான அந்த சூத்திரம்,
“தவம், சுய அறிதல், செயலின் பயனை இறைவனுக்கு அர்ப்பணித்தல் கிரியா யோகம்’
பதஞ்சலி சூத்திரத்தில் கிரியா யோகம் அடிப்படையான பயிற்சியாகவும், அட்டாங்க யோகத்தின் அங்கங்கள் ஆரம்ப பயிற்சிகளாகவும் காணப்படுகிறது. ஆனால் திருமந்திரத்தில் அட்டாங்க யோகம் விரிவாகப் பாடப்பட்டுள்ளது. முதலில் கிரியா யோகத்தின் வரலாற்றைப் பார்க்கலாம்.
கிரியா யோகம்
‘கிரியா’ என்பது விழி்ப்புணர்வுடன் செய்யக்கூடிய ஒரு உள்ளக செயற்பாடு, எந்த செயற்பாட்டோடும் நான் என்ற உணர்வு சேரும் போது ‘கர்மா’ ஆகி விடுகிறது. கிரியா எம்மை ஆன்ம விடுதலை நோக்கியும், கர்மா வினைப் பதிவுகளை ஏற்படுத்தி உலக பந்தத்திலும் பிணைத்து விடுகிறது. கிரியா யோகம் என்பது குறிப்பிட்ட செயல்கள்(கிரியா) மூலம், அந்த செயல்களை விடாமுயற்சியும் நம்பிக்கையுடனும் பயிலும் யோகியானவன், படிப்படியாக தனது கர்மவினைகளில் இருந்து விடுதலையாகிறான். இன்னொரு வகையில் கூறுவதானால், எந்த செயல்கள் நமக்கு இறைவனின் சக்தியை ஞாபகப்படுத்துகிறதோ அதனை கிரியா எனக் கூறலாம்.
இறைத்தன்மை அடைவதற்காக அந்த இறை சக்தியிடமிருந்து வந்ததும், புராதனமானதும் கிரியா யோகமாகும். மனிதனின் பரிணாம வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் இந்தக் யோக, விஞ்ஞானக்கலை இன்று என்றுமில்லாதவாறு பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனைப்பற்றிய குறிப்புகள் பகவத் கீதையின் நாலாம் அத்தியாயத்தின் ஆரம்பத்தில் வருகிறது. கிருஷ்ணர் தம் முன்னைய அவதார காலங்களில் எவ்வாறு கிரியா யோகம் பரவியது என்பதை விபரிக்கிறார். “அழிவற்ற இந்த யோக விஞ்ஞானத்தை நான் சூரியதேவனான விவஸ்வானுக்கு உபதேசித்தேன். விவஸ்வான் மனித குலத்தந்தையான மனுவுக்கும், மனு, இஷ்வாகு மன்னனுக்கும் இதை முறையே உபதேசித்தனர்.” . மன்னர்கள் வழி வந்ததால் ‘இராஜ யோகம்’ என்றும் அழைக்கப்பட்டது. “சீடர்கள் மூலம் உணரப்பட்டுவந்த இந்த விஞ்ஞானம் காலப்போக்கில் மறைந்து விட்டது போல் தோன்றுகிறது. நீ எனது நண்பனும் பக்தனுமாதலால் இன்று உனக்கு எடுத்துரைத்தேன். பல பிறவிகளை நாமிருவரும் கடந்துள்ளோம். என்னால் அவற்றை நினைவு கொள்ள முடியும். உன்னால் முடியாது.” இவை பகவத் கீதையில் வரும் வரிகள்.
கீதையின் IV.29 வசனத்தின் மூலம், பிராணாயாமத்தால் எவ்வாறு ஒரு யோகி சமாதி அனுபவத்தை அடைய முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது. உள்ளிளுக்கும் மூச்சை, வெளிவிடும் மூச்சுக்கு வழங்குவதன் மூலமும், வெளிவிடும் மூச்சை உள்ளெடுக்கும் மூச்சுக்கு வழங்குவதன் மூலமும் யோகியானவன் இருவகை மூச்சுகளையும் நடுநிலைப்படுத்தி இயல்பாகவே நின்றுவிடும் கேவல கும்பகம் எனும் சமாதி நிலைக்கு செல்கிறான். இந்நிலையில் இதயத்திலிருந்து விடுவிக்கப்படும் பிராணசக்தியானது அவனது கட்டுப்பாட்டில் வருகிறது. கீதையில் 5.27-28 வரிகளில் “எல்லாப் புறப்புலன் விசயங்களையும் வெளியே நிறுத்தி, புருவமத்தியில் கண்களையும் பார்வையையும் நிறுத்தி, நாசிக்குள் உள், வெளி சுவாசங்களை நிறுத்தி, மனம், புலன்கள், அறிவு இவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆன்மீகவாதி ஆசை, கோபம், பயம் இவற்றிலிருந்து விடுபடுகிறான். எப்போதும் இந்நிலையில் இருந்தவன் முத்தியடைந்தவனே.”
அர்ஜூனன் என்ற உடற்தேரினுள் உள்ள ஆன்மா தன்னை அறிய, இறைசக்தியாம் கிருஷ்ணன் என்ற தேரோட்டி(புத்தி) உதவியுடன் மனக் கயிற்றினால் பிணைக்கப்பட்டுள்ள புலன்கள் என்ற குதிரைகளை அடக்கினால் மட்டுமே அகப்பயணம் எனும் குருஷேத்திரப் போரை நிகழ்த்த முடியும். இதற்கு நமக்கு துணையாக இருப்பது கிரியா யோகப் பயிற்சியாகும்.
மறைந்து போனதாக கூறிய கிருஷ்ணராலேயே அர்ஜீனனுக்கு மகாபாரதத்தில் கிரியா யோகம் உபதேசிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியே பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரமும், கிரியா பாபாஜியினால் வழங்கப்பட்டு, இன்று உலகெங்கும் பின்பற்றப்பட்டு வரும் 144 கிரியைகளைக் கொண்ட கிரியா யோகமுமாகும். கி.பி 203 ஆம் ஆண்டு கார்த்திகை 30 ஆம் நாளில் கிருஷ்ணர் பிறந்த அதே ரோகிணி நட்சத்திரத்தில், தமிழ்நாட்டில் கடலூரிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ள பரங்கிப்பேட்டை என்ற கிராமத்தில் நம்பூதிரி பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். பாபாஜியின் இயற்பெயர் நாகராஜ் என்பதாகும். ஐந்து வயதில் ஒரு வணிகனால் கடத்தப்பட்டு, தற்போது கொல்கத்தா என்று அறியப்படும் இடத்தில் செல்வந்தர் ஒருவருக்கு விற்கப்பட்டு, அவரின் இரக்க குணத்தால் விடுவிக்கப்பட்டார். நாடோடிகளாக திரியும் சன்னியாசிகளுடன் இணைந்து கொண்டார். அவர்களிடமிருந்து ஆன்மீக, தத்துவ மெய்யறிவு பெற்றும் திருப்தி அடைந்தார் இல்லை. பின்னர் கதிர்காமத்தில் சித்தர் போகநாதரிடம் தியானங்களையும், குற்றாலத்தில் சித்தர் அகத்தியரிடம் பிராணாயாம தீட்சையும் பெற்றார். கற்றவற்றை இமயத்தின் பத்திரிநாத் என்ற இடத்தில் 18 மாதங்கள் கடுமையான சாதனை செய்து சொரூப சமாதியடைந்தார். அவர் இன்றும் 16 வயது தோற்றத்தில் தமது சீடர்களுக்குக் காட்சி தருகிறார். வரலாற்றில் நாமறிய ஆதிசங்கரர், கபீர் தாஸ் போன்ற ஞானிகளின் ஆன்மீக வளர்ச்சியின் பின்னும், நாம் அறியாத பலரின் பின்னும் பாபாஜி இருந்துள்ளார் என்பது தெளிவு.
தற்காலத்தில் நாம் பயிற்சி செய்யும் கிரியா யோகமானது, பல யோக சூத்திரங்களின் நடைமுறை பயிற்சிகளாகவும், சித்தர்களின் யோக மரபின் தொடர்ச்சியாகவும் தற்கால சமுதாயத்தின் ஆன்மீக விடிவுக்காக, பாபாஜியால் உருவாக்கப்பட்டுள்ளது. இல்லற யோகியாக இருந்து சாதனை செய்வதற்கான அடித்தளம் இடும் நிகழ்வு 160 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. இந்தியாவின் வங்காளத்தில் 1828 ஆம் ஆண்டு பிறந்த லாகிரி மகாசாயர் தனது 33 ஆவது வயதில் ராணிகேத் என்ற இடத்தில் பாபாஜியைச் சந்தித்தார். அங்கு அவருக்கு முன்னைய பிறவியில் பாபாஜியுடன் இருந்த ஆன்மீக தொடர்பு ஞாபகம் வந்தது. முன்னைய பிறவியில் லாஹிரி மகாசாயருக்கு மாளிகை ஒன்றின் அழகை காணும் ஆசை இருந்தது. இப்பிறவியில் பாபாஜியினால் உருவாக்கப்பட்ட தங்க மாளிகையில் வைத்து, கிரியா யோகத்தில் தீட்சையும் வழங்கப்பட்டது. இதன் மூலம் அவரின் கடைசி கர்ம பிணைப்பில் இருந்தும் விடுதலையானார். இல்லறத்தில் இருந்தபடியே யோகியாகவும், பாபாஜியின் கிரியா யோகத்தை நவீன உலகுக்கு எடுத்துவரும் அரும்பணியை அவர் உருவாக்கிய சீடர்கள் மூலமும் சாத்தியமாக்கினார். பரமஹன்ச யோகானந்தர் மூலம் மேற்குலகிற்கும், அவரின் சமாதியின் பின், யோகி இராமையாவுக்கு, பாபாஜியால் நேரடியாகத் தீட்சை வழங்கப்பட்டதன் மூலம், இன்று நாம் அறியும் 144 கிரியாக்களைக் கொண்ட கிரியா யோகமும் இவ்வுலகுக்குக் கிடைத்த பேறாகும். தீட்சையின் போது பாபாஜி, லாஹிரி மகாசாயரிடம் தெரிவித்த விடயங்கள், யோகானந்தரின் ‘ஒரு யோகியின் சுயசரிதையில்’ இருந்து,
“இந்த 19ம் நூற்றாண்டில் உன் மூலமாக இந்த உலகுக்குத் தரும் கிரியா யோகமானது, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு வழங்கிய அதே விஞ்ஞானத்தின் உயிர்ப்பூட்டலாகும். அது பின்னர் பதஞ்சலிக்கும், இயேசு கிறிஸ்துவுக்கும், புனித ஜான், புனித போல் மற்றும் சீடர்களுக்கும் தெரிந்திருந்தது.”
இமாலயப் பகுதிகளில் வாழும் கஸ்தூரி மான்(Musk Deer), தன் உடலின் ஒரு பகுதியிலிருந்து கஸ்தூரி மணம் வருகிறது என்று தெரியாமல், அம்மணத்தைத் தேடி அலைந்து திரிவதைப் போலவே நாமும் எம்முள் உள்ள நிலையான அந்த ஆனந்தத்தை, தெய்வீகத்தை உணராமல் புறத்தில் தேடி அலைகின்றோம். கபீர் தாஸின் கவிதையொன்றின் மூலப்பொருள் இது. அந்த ஆத்மனைத் தேட நமக்கு தேவையானது பயிற்சி அல்லது சாதனை. பதஞ்சலி முனிவரின் சாதனை பாதம் கிரியா யோகம் என்ற புராதன யோகத்தை வரையறுப்பதோடு ஆரம்பமாகிறது.