கொவிட் தொற்றுநோய் காரணமாக நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்னமும் காணப்படும் நிலையில், உள்நாட்டு பெறுமதி சேர் திட்டத்தின் கீழ் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பாகங்களைக் கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட பஜாஜ் பிராண்ட் நியூ மோட்டார் சைக்கிள்கள் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளூர் சந்தைக்குக் கொண்டுவரப்பட்டன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாகங்களைக் கொண்ட 40,000ற்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள் இதுவரையில் உள்நாட்டு சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளன. கொவிட் தொற்றுநோய்க்குப் பிந்தைய சூழ்நிலையில் சவால்களைச் சமாளிப்பதற்கான ஒரு சிறந்த உதாரணமாக இதனை எடுத்துக்கொள்ள முடியும் என்பதுடன், இது வாகனத் துறையைப் புதிய திசைக்கு இட்டுச் செல்வதில் வெற்றி கண்டுள்ளது என்பது இரகசியமல்ல.
2020ஆம் ஆண்டு வாகன இறக்குமதிக்கு மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன் 2021ஆம் ஆண்டு கைத்தொழில் அமைச்சினால் இந்நாட்டின் வாகனத் தொழில்துறையில் பாரிய மாற்றத்துக்கு வழிவகுக்கக் கூடிய நிலையான இயக்க நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாகங்களைப் பயன்படுத்தி இலங்கையில் வாகன ஒருங்கிணைப்பை மேற்கொள்வது என்ற இலட்சிய இலக்கை அடைவதற்காக இந்த நிலையான செயற்பாட்டு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
கைத்தொழில் அமைச்சின் நிலையான செயற்பாட்டு நடைமுறையின் கீழ், டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (லங்கா) லிமிடட் இலங்கையில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது மோட்டார் சைக்கிள் மாதிரியாக டிஸ்கவர் 125 மோட்டார் சைக்கிளை நாட்டிற்கு அறிமுகப்படுத்தியது. இது 32 சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாகங்களை (22 பாகங்கள்) உள்ளடக்கியதாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது தற்பொழுது 33 சதவீத உள்நாட்டு பெறுமதி சேர்ப்புடன் (33 பாகங்கள்) ஒருங்கிணைக்கப்பட்டு சந்தைக்கு வெளியிடப்படுகின்றது.