மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள செபு மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாகாண தகவல் அலுவலகத்தை மேற்கோள் காட்டி, உள்ளூர் செய்தித்தாள் சன்ஸ்டார் செபு, நிலநடுக்கத்தின் மையப்பகுதியான போகோ நகரில் 13 பேர் கொல்லப்பட்டதாகவும், வடக்கு செபுவில் உள்ள சான் ரெமிஜியோ நகரில் நான்கு பேர் இறந்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு 9:59 மணிக்கு செபு மாகாணத்தில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் எரிமலையியல் மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம், ஆரம்பத்தில் தெரிவித்தது. பின்னர் அந்த நிறுவனம், போகோ நகரத்திலிருந்து வடகிழக்கே சுமார் 19 கிலோமீற்றர் தொலைவில் 5 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறி, அந்த அளவை 6.9 ஆக மாற்றியது.
மத்திய பிலிப்பைன்ஸின் பல அண்டை மாகாணங்களிலும், தெற்கு பிலிப்பைன்ஸின் சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
பிலிப்பைன்ஸ் பசிபிக் பெருங்கடலில் “நெருப்பு வளையம்” என்ற பகுதியில் அமைந்துள்ளது, இது பூகம்பங்கள் மற்றும் எரிமலை செயல்பாடுகளுக்கு ஆளாகக்கூடிய ஒரு மண்டலமாகும்.