Monday, August 11, 2025 9:51 am
தன்னுடைய ராப் பாடல்கள் மூலமாக இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்தவர் வேடன் (ஹிராந்தஸ் முரளி). அதையடுத்து அவர் மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் மூலமாகப் பாடகராக அறிமுகமானார். அந்த படத்தில் அவர் பாடிய பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.
அதையடுத்து தற்போது மலையாள சினிமாவில் பிஸியான ராப் பாடகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் வேடன். அவர் சினிமா தவிர்த்து அரசியல் கருத்துகளை –குறிப்பாக தலித் மக்களின் வாழ்க்கையை, அவர்களின் போராட்டங்களையும் , எழுச்சியையும் பாடி வருகிறார்.
இந்நிலையில் கடந்த மாதம் அவர் மேல் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை வைத்துள்ளார். மனுதாரர் தரப்பில் “வேடனின் பாடல்க்ளுக்கு ரசிகையாக இருந்த அந்த பெண், வேடனை சந்தித்துப் பேசி பழகியதாகவும், அந்த பழக்கம் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்துள்ளனர். ஆனால் ஒரு கட்டத்தில் தன்னை விட்டு வேடன் பிரிந்துவிட்டதாகவும் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தன்னிடம் பல சமயங்களில் பணம் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து திரிக்கரக்கா பொலிஸார் வேடன் மேல் 376(2) ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது வேடனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. வேடன் வெளிநாடுகளுக்குத் தப்பித்து சென்று விடாமல் இருப்பதற்காக போலீஸார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

