சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழியில் இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளாராம் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை. பாபா முத்திரையுடன் அவர் கொடுத்துள்ள போஸ் வைரலாகியுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவராக கடந்த நான்கு ஆண்டு காலம் அதிரடி காட்டி வந்தவர் அண்ணாமலை. சும்மா சொல்லக் கூடாது, கடந்த கால பாஜக தலைவர்களில் டாக்டர் தமிழிசை செளந்தரராஜனுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பாஜகவின் இருப்பை அதீதமாக்கியவர் அண்ணாமலைதான்.
அவர் மீது பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் கூட பாஜகவுக்கு தமிழ்நாட்டில் தனித்த அடையாளத்தை ஏற்படுத்தினார் என்பதை யாருமே மறுக்க முடியாது. எந்த அரசியல் கட்சித் தலைவரையும் அவர் நிம்மதியாக தூங்க விட்டதில்லை. நிம்மதியாக எழ விட்டதும் இல்லை. ஒவ்வொரு நாளும் ஒரு புயலைக் கிளப்பி அதிரடி காட்டி வந்தவர் அண்ணாமலை.இந்த நிலையில் தற்போது அண்ணாமலை மாற்றப்பட்டு விட்டார். புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் வந்துள்ளார்.
தற்போது நல்ல ஓய்வு கிடைத்துள்ளதால் அதைப் பயன்படுத்திக் கொண்டு இமயமலைக்கு ஆன்மீக பயணம் போயுள்ளார் அண்ணாமலை. இதுதொடர்பான புகைப்படம் ஒன்றை பாஜக பொதுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான வினோஜ் பி செல்வம் வெளியிட்டுள்ளார். அதில், அண்ணாமலை அவர்கள் ஆன்மீக பயணம் போயிருப்பது மகிழ்ச்சி தருகிறது. மகாவதார் பாபாஜியின் அருள் அவருக்கு நிறையவே கிடைக்கட்டும். பாபா முத்திரையுடன் அவர் காட்சி தருவது என்னைப் போன்ற ரஜினி ரசிகர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.