எமது சற்குரு பாபாஜி நாகராஜ் பல தருணங்களி்ல் மெய்யடியார்கள் பலர் முன் நேரே தோன்றி காட்சி கொடுத்துள்ளார். மகா அவதார் பாபாஜி அவர்கள் சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் பரங்கிப்பேட்டை என அழைக்கப்படும் சிறிய கிராமத்தில் கி.பி 203 ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ம் திகதி ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் நாகராஜ். பின்னாளில் மகா யோகி பாபாஜி என அழைக்கப்படலானார்.
இவரின் பெற்றோர் கேரளாவிலுள்ள மலபார் பிரதேசத்திலிருந்து பரங்கிப்பேட்டைக்கு வந்து குடியேறினர். இவரது தந்தையார் முருகன் ஆலயத்தில் பிரதம பூசகராகப் பணியாற்றி வந்தார். ஆசார மிக்க பிராமண குலத்தில் பிறந்து தெய்வீக சூழலில் வாழ்ந்தமையாலும் நாகராஜ் இறை பக்தி மிக்க சிறுவனாக வளரலானார்.
குழந்தை நாகராஜ் 5 வயது சிறுவனாக இருந்த போது தந்தை பூசகராகக் கடமையாற்றிய கோயில் திருவிழா ஒன்றைக் காண்பதற்காகச் சென்றிருந்தார். கோயிலில் நுழைவாயிலில் நின்று பெரும் கூட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது தற்போதய பாகிஸ்தானின் பலுச்சிஸ்தானைச் சேர்ந்த வியாபாரி ஒருவன் மெதுவாகக் கடத்திச் சென்றான். பாபாஜியின் அழகிய தோற்றமும் பணமாக்கும் ஆவலும் அவனைத் தூண்டியிருக்க வேண்டும். இந்தியாவின் கிழக்கு கடற்பாதை வழியாக, படகின் மூலம் கல்கத்தா வரை கடத்திச் சென்று அங்கே ஒரு செல்வந்தருக்கு அடிமையாக விற்றான். அவரால் சிறுவனின் நாகராஜின் முகத்தில் குடிகொண்டிருந்த தெய்வீகக் களையை அவதானிக்க முடிந்தது. சிறுவனை அடிமையாக்க அவர் மனம் ஒப்பவில்லை. எனவே சிறுவனை பூரண சுதந்திரம் அளித்து விடுவித்தார்.
புதிய சூழலில் துறவு வாழ்க்கை மேற்கொண்டு யாத்திரை மேற்கொள்ளும் சன்னியாசிகளின் கூட்டத்தில் இணையும் வாய்ப்பு நாகராஜுக்குக் கிடைத்தது. அவர்களுடன் சேர்ந்து கொண்டதால் வேதங்கள், உபநிடதங்கள், மகாபாரதம், இராமாயணம், பகவத்கீதை போன்ற நூல்களைக் கற்றுக் கொண்டார். மிக இளமைப் பருவத்திலேயே வேதசாத்திரங்கள் அனைத்தையும் கற்றறிந்த பண்டிதராக விளங்கினார். அந்த இளவயதிலேயே இறைவனை அறியும் ஆவல் அவர் உள்ளத்தில் எழத் தொடங்கியது. அவரது ஆன்மீகத் தேடலுக்கு குருவாக எவரும் இருக்கவில்லை. இத்தனையும் கற்றும் திருப்தி அடைந்தார் இல்லை. நூல் அறிவு ஒரு எல்லையில் முடிவடைவதைக் கண்டார். புலன்களையும் தாண்டிய அந்த அறிவின் உணர்வு நிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்ளும் ஆவல் அவரைத் தூண்டியது. அவரது ஆன்மார்த்தமான தூண்டுதலினால் தனது 11 வது வயதில் தென் இலங்கையிலுள்ள முருகன் ஆலயமான கதிர்காமத்தை நோக்கிப் புறப்பட்ட அடியார் குழுவுடன் இணைந்து கொண்டார். கால்நடையாகவும், படகுகள் மூலமாகவும் நீண்ட கடினமான பயணத்தை மேற்கொண்டார். பலமாதங்களின் பின்னர் கதிர்காமத்தைச் சென்றடைந்தார்.
கதிர்காமக் கோயில் சித்தர் போகநாதரால் ஸ்தாபிக்கப்பட்டது. இங்கு மூலத்தானத்தில் உள்ள இயந்திரத்தை போகநாதரே உருவாக்கினார். கதிர்காமத்தில் நாகராஜ், போகநாதரைச் சந்தித்தார். போகநாதரைக் கண்ட மாத்திரத்தே பாபாஜிக்கு இவரே தமது குரு என்ற உணர்வு ஏற்பட அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டார். ஏறக்குறைய ஆறு மாதங்கள் ஒரு மர நிழலில் பல்வேறு யோகங்களையும் தியான முறைகளையும் பயின்றார். நாளடைவில் போகநாதரின் வழிகாட்டலில் தத்துவ சித்திகளை அறிந்தவராகி சித்தாந்தத்தின் முழுமகிமைகளையும் உணர்ந்து கொண்டார்.
சித்தாந்தத்தின் பூரண ஞானம் பெற்றிருந்த பாபாஜி, கிரியா யோகம், குண்டலினி பிராணாயாமம் மற்றும் பக்தி யோகத்திலும் தேர்ச்சி பெற விரும்பினார். இவரது விருப்பத்தை அறிந்த போகர் சித்தர் தென்னிந்தியாவில் பொதிகை மலைச்சாரலை நோக்கி பயணம் செய்து குற்றாலம் என்ற இடத்தில் இவற்றை சித்தர் அகத்தியரிடம் கற்கும்படி பணித்தார். குற்றாலத்திலுள்ள சக்திபீடத்தை அடைந்த பாபாஜி, அகத்திய முனிவரைக் கண்டு கற்கும் வரை எங்கும் செல்வதில்லை என்று தீர்மானித்து, அங்கு ஒரு ஆசனத்தில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். உடல், மனம், இதயம், ஆத்மா ஆகிய நான்கும் ஒன்றுபட்ட நிலையில் அவர் தவமிருந்தார். அவ்வழியே செல்லும் அடியார்கள் ஆகாரம், நீர் வழங்கினால் சிறிதளவு பெற்றுக் கொள்வார். நாளாக அவரின் உடல்நிலை பலவீனமடைந்து வந்தது. ஆனால் பாபாஜி தன் உடல் தனக்கு சொந்தமில்லை என்ற நினைவிலேயே இருந்தார். சரியாக 48 ம் நாள் அகத்திய முனிவர் அவர் முன் தோன்றினார். பாபாஜியை, ‘நாகராஜ்’ என மென்மையாக அழைத்து கட்டி அணைத்துக் கொண்டார். அவருக்கு ஆகாரமும் நீரும் கொடுத்தார். அவருக்கு கிரியா குண்டலினி யோக முறையைப் பின்பற்றுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அனுஷ்டானங்களையும் கட்டுப்பாடுகளையும் எடுத்துக் கூறினார். காலப்போக்கில் கிரியா குண்டலினி யோகாவின் அதிஉயர் நிலையை எய்தியதை உணர்ந்த அகத்தியர் அவரை இமயமலைத் தொடரின் மேற்பகுதியில் அமைந்துள்ள பத்திரிநாத் என்ற இடத்துக்குச் சென்று கற்றவற்றை சாதனை செய்ய ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.


( பத்திரிநாராயணன் கோயிலும் அழக்நந்தா ஆறும், பத்திரிநாத். )
பத்திரிநாத் ஏறக்குறைய 10,000 அடி உயரத்தில் இமாலய மலைத் தொடரில் அமைந்துள்ள ஒரு தெய்வீக ஸ்தலமாகும். ஐப்பசி மாதத்திலிருந்து வைகாசி வரை கடுங்குளிரும் பனிப்பொழிவும் இருக்கும். மிக மனவுறுதி மிக்க யோகியர்களால் மட்டுமே இங்கு ஆண்டு முழுவதும் இருக்க முடியும். பல்லாண்டு காலமாக ஞானியர்களாலும், ரிஷிகளாலும், யோகிகளாலும், சித்தர்களாலும் புனிதமாக்கப்பட்ட பிரதேசம் பத்திரிநாத். இத்தகைய அரிய தலத்தில் பாபாஜி 18 மாதங்கள் தான் கற்றவற்றைக் கொண்டு கடுமையான தவம் இயற்றினார். தவத்தின் பயனாக சொரூப சமாதி நிலைக்கு வந்தார். அவரது பௌதீக உடல் தங்கம் போல் ஒளிர ஆரம்பித்தது. மூப்பு, பிணி, சாக்காடு என்பவற்றை வென்றவராகி அதே இளமைக் கோலத்தில் இன்றும் வாழ்ந்து வருகிறார். தமிழ் யோக சித்தாந்த மரபில் உள்ள 18 சித்தர்களுடன் மிக உயரிய நிலையில் உள்ளார்
‘ஓம் கிரியா பாபாஜி நம ஔம்’ என்பது கிரியா யோகிகளிற்கும் சகலருக்கும் பாபாஜியின் அருளை வழங்கும் மந்திரமாகும். மந்திரமாகும். இதில் ‘ஓம்’ என்பது பிரணவ மந்திரம். சகல படைப்புகளுக்கும் காரணமான பிரபஞ்ச அதிர்வு. ‘கிரியா’ என்பது விழிப்புணர்வுடன் கூடிய செயல். ‘பாபாஜி’- கிரியா யோக மரபின் மூலகுரு. ‘நம’ என்பது வணக்கம் என்றும், ‘ஔம்’ – நம்முள் உணரும் பிரணவ ஒலி. இம்மந்திரத்தின் மூலம் பாபாஜி தன்னை பக்தர்களுக்கு வெளிப்படுத்துகிறார். தொடர்ந்து உச்சரிப்பதன் மூலம் சகஸ்ர சக்கரத்தில் அமைந்துள்ள பேரறிவாற்றலோடு நாம் தொடர்பு கொள்ளலாம். ஆற்றல் வாய்ந்த இந்த மந்திரத்தின் மூலம் பாபாஜி தனது சக்தியை சீடர்களுக்கு அளிக்கிறார். குருவின் சொல்லே மந்திரத்தின் வேராகவும் குருவுருவாகவும் திகழ்கிறது. எனவே எமது வாழ்க்கையின் இலட்சியமான மகிழ்ச்சி, அமைதி, அன்பு மற்றும் ஞானம் பெற்று உய்ய கிரியா பாபாஜியை சரணடைந்து பேரின்பம் பெறுவோமாக.
பாபாஜியினால் நேரடி சீடர்களுக்கு கொடுக்கப்பட்ட நான்கு கிரியா யோக வழிமுறைகள்
- ஆதிசங்கரர் ; 9 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் இந்து-பௌத்தமத பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய பாபாஜியினால் கொடுக்கப்பட்ட அத்வைத வேதாந்த கிரியா யோகதீட்சை.
- கபீர்தாஸ் ; 15 ஆம் இஸ்லாம்- இந்து மத பிரச்சனையை நிவர்த்தி செய்ய ‘கபீர்கத் கிரியா யோக தீட்சை’.
- லாகிரி மகாசாயர் ; 19 ஆம் நூற்றாண்டில் இந்திய வரலாற்றில் கிரியாவின் உயர்ந்த உண்மைகளை உலக மக்களுக்கு (வட இந்தியா- அமெரிக்கா) சென்றடைய கொடுக்கப்பட்டது ‘யோகதா கிரியா யோகம்’.
- யோகி இராமையா ; 20 ஆம் நூற்றாண்டில் உலக மக்களுக்கு சென்றடைய ‘சைவ சித்தாந்த சிவயோக கிரியா யோகம்’ வழங்கப்பட்டது. (52 நாடுகளில் கிரியா பாபாஜி சங்கங்கள் அமைக்கப்பட்டு கிரியா யோகம் வளர்ந்து வருகிறது.)
கிரியா யோகத்தின் எளிய விளக்கம்
கிரியா யோகமானது சிவயோகத்திலிருந்து உருவானது. இந்த சிவயோகத்தை சிவன் அகத்தியருக்கும், அகத்தியர் பாபாஜிக்கும் தீட்சை மூலம் கொடுத்தார்கள். பாபாஜி இதனை எமக்காக மிக இலகுவான முறையில் கிரியா யோகமாக வகுத்து, நாம் லௌகீக வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு இந்த கிரியா சாதனையை ஒவ்வொரு நாளும் செய்து அதீதமான பிரபஞ்ச சக்தியை உடலினுள் பெற்று மிகவும் உன்னதமான நிலையாகிய ஆன்ம ஈடேற்றத்தை அடைய வழி வகுத்துள்ளார். குரு-சீட பரம்பரை வழியாக இந்த யோகக்கலை கொடுக்கப்படுகிறது. எமக்கு இந்த தெய்வீகக் கலை பாபாஜியின் நேரடி சீடர் யோகி இராமையாவினால் கொடுக்கப்பட்டது.
கிரியா யோகத்தின் சிறப்பு ; எமது வாழ்வில் கிரியா யோகத்தை கிடைக்க அருள் புரிந்த பாபாஜியின் பாதங்களுக்கு வணக்கம். கிரியா என்பது செயல். எமது உடலின் செயல்முறை இசைவாக்கம் யோகம் செய்வதை ஊக்குவிப்பதால் ‘கிரியா யோகம்’ என்று அழைக்கப்படுகிறது. இது 5 பகுதிகளைக் கொண்டது, முதலாவது தேக உடம்புக்குச் செய்யும் 18 ஆசனங்கள். இரண்டாவது சுவாச உடம்புக்குச் செய்யும் குண்டலினி பிராணாயாம பயிற்சி. மூன்றாவது மன உடம்பிற்குச் செய்யும் தியானப் பயிற்சி. நான்காவது அறிவு உடம்பிற்குச் செய்யும் மந்திரப் பயிற்சி. ஐந்தாவது ஆன்ம உடலை உணரும் தன்மையும் உள்ளடங்கியது. அது மாத்திரமல்ல இந்த 5 உடலுறைகளும் சைவசித்தாந்தத்தில் அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என சித்தரிக்கப்பட்டுள்ளது.
தேக உடம்பிற்கான யோகா பயிற்சியை தொடர்ந்து சிலகாலம் செய்து தேக உடம்பை சமச்சீரான நிலைக்கு கொண்டு வந்த பின்னர் குருவிடம் இருந்து யோக தீட்சையைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த தீட்சையைப் பெற்றவர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்கள் 5 உடலுக்குமாக செய்ய வேண்டும். செய்து முடிவில் பாபாஜியின் பஞ்சாட்சர மந்திரத்தை ( ஓம் கிரியா பாபாஜி நம ஔம் ) 16 தடவை எழுதி அந்த நாளுக்குரிய சாதனையை முடிக்க வேண்டும்.
உண்மையை உணர்தலே முக்தி, கைவல்யம், மோட்சம். இவ்வுடல் இருக்கும் போதே இதனை உணரும் போது அது சீவன் முக்தி எனப்படும். விடுதலையை வலியுறுத்துவதே ஆன்மீகத்தின் நோக்கம். முக்தியைப் பெறக் கர்மம், பக்தி, யோகம், ஞானம் என நான்கு வழிகளைப் பெரியோர்கள் வகுத்துள்ளனர். அவை நான்கும் ஒன்று சேர்ந்தது பாபாஜியின் கிரியா யோகம். இம்மார்க்கம் பயத்திலிருந்தும், சோகத்திலிருந்தும் விடுதலை தரும். அறியாமையிலிருந்து விடுதலை, இன்மையிலிருந்து விடுதலை, அழிவிலிருந்து விடுதலை என மூவகையிலும் கிரியா யோகம் விடுதலை தரும். விடுதலையைத் தருவதே குருவின் நோக்கம். விடுதலை பெற்றவர் சமநிலை உடையவர்.
பாதை வேறுபடலாம். ஆனால் முடிவு ஒன்றே. பாபாஜியின் பாதை எல்லோரையும் நேசித்து அன்போடு வழிநடத்த வழி காட்டுவது. நாம் எம் முற்பிறவியில் செய்த நல்வினையால் இப்பிறவியில் பாபாஜியின் கிரியா யோகத்தை பயில்வதற்குக் கொடுத்து வைத்துள்ளோம். எனவே இளம் சந்ததியினர் இந்த கிரியா யோகத்தை தமது வாழ்வில் கடைப்பிடித்து வருவார்களானால் மாசுபட்டு வரும் சூழலினால் எதிர்நோக்கும் நோய் நொடிகளிலிருந்து (கொரனா) தம்மைக் காப்பாற்றிக் கொள்வார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. நாம் வாழ்வில் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் பாவங்களில் இருந்து விடுபட வழி வகுக்கிறது. எனவே பாபாஜி விரும்பும் கிரியா சேவை செய்து கிரியா யோகத்தை வளர்ப்போம்.
ஜெய் பாபாஜி, ஜெய் பாபாஜி, ஜெய் ஜெய் பாபாஜி
ஓம் கிரியா பாபாஜி நம ஔம்.
திரு.க.இறைவன்
கொழும்பு பாபாஜி யோகா சென்ரர்