இலங்கை தமிழரசு கட்சி நெடுந்தீவு பிரதேச சபையின் எட்டு வட்டாரங்களுக்குமான உள்ளுராட்சித் தேர்தல் பரப்புரைகளை நேற்று மேற்கொண்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் இப்பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டார்.
‘பிரச்சார நடவடிக்கையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபைக்கான முதன்மை வேட்பாளர் முன்னாள் ஓய்வுநிலை அதிபர் சங்கரப்பிள்ளை சத்திய வரதன் உள்ளிட்ட வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த பரப்புரையில் பொது மக்களிடம் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன்,
கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக நெடுந்தீவு பிரதேச சபை வேறு சிலரின் கைகளிலேயே இருந்தது.
சொத்துக்களை சொந்தப் பாவனைக்காக அவர்கள் பயன்படுத்தினர்.
35 ஆண்டுகளிலும் இந்த பிரதேச வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவில்லை.
மக்களுக்கான மேம்பாட்டத்திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த பிரதேசத்துக்கான ஒதுக்கீடுகள் காணாமல் போகும் அளவுக்கான நிலைமைகள் காணப்படுகின்றன.
கடந்த 2018ம் ஆண்டு தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்ட போதும் பெரும்பான்மை இல்லாத சிக்கல் காரணமாக இந்த சபை கையை விட்டு போயிருந்தது.
இம்முறை நெடுந்தீவு பிரதேச சபை நெடுந்தீவு மக்களால் ஆளப்பட வேண்டும்.
அதற்கு நீங்கள் எமக்கு பெரும்பான்மை பலத்தை வழங்க வேண்டும்.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, நிரந்தரமான அரசியல் தீர்வு, வாழ்வுக்கான போராட்டம் ஆகியவற்றுக்கான தீர்வாக சமஸ்டி அரசியலமைப்பை கோருகின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கைகளுக்கு அமைவாக அடிப்படை அலகான உள்ளுராட்சி மன்றங்கள் எமது கைகளுக்கு வர வேண்டும்.
எமக்கு நடந்தது இனப்படுகொலை என்பதை சர்வதேச சமூகத்துக்கு சொல்ல வேண்டுமென்றால் நாம் இந்த சபையை வெற்றிகொள்ள வேண்டும்.
காணாமலாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் உள்ள எமது மக்களுக்கு ஒரு சர்வதேச நீதி கிடைக்க வேண்டும் என்றால் நெடுந்தீவு பிரதேச சபை எம்மிடம் இருக்க வேண்டும்.
பறிக்கப்பட முடியாத அதிகாரங்களோடு இந்த நாட்டில் கெளரவமான வாழ்வு வாழ்வதற்கான அதிகாரமான சமஸ்டி அதிகாரத்தை பெற வேண்டும் என்றால் நெடுந்தீவு பிரதேச சபை எம்மிடம் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.